ஆவினில் மாதம் தோறும் 430 கோடி ரூபாய் நஷ்டம் - பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் கூறும் பகீர் தகவல்

தி.மு.க ஆட்சிக்கு வரும் வேளையில் 46 லிட்டர் லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது தற்பொழுது குறைந்துள்ளது என பால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2022-10-28 14:35 GMT

தி.மு.க ஆட்சிக்கு வரும் வேளையில் 46 லிட்டர் லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது தற்பொழுது குறைந்துள்ளது என பால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் பால் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சங்க நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது, 'தமிழக முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 36 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதேசமயம் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2.57 கோடி லிட்டர் பால் கொள்முதல் ஆகிறது.

இந்த அளவிற்கு பால் கொள்முதலில் வித்தியாசம் ஏற்படக் காரணம் ஆவினில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 32 ரூபாயும் எருமை பாலுக்கு 42 ரூபாயும் மட்டுமே உற்பத்தியாளர்களுக்கு தருகின்றனர். அதே சமயம் தனியார் பால் கொள்முதல் நிலையத்தில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 42 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையும், எருமை பாலுக்கு 65 ரூபாயும் தருகின்றனர். இதனால் பல பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பால் விற்பனை செய்ய முற்படுகின்றனர்.

தற்போது அதிகரித்துள்ள தீவன விலை உயர்வு, பராமரிப்பு செலவு ஆகியவைகளால் ஆவின் மூலம் வழங்கப்படும் பால் விலை கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுக்கு கட்டுப்படியாகவில்லை எனவே ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு 42 ரூபாயும், எருமை பாலுக்கு 52 ரூபாயும் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வரும் பொழுது ஆவின் மூலம் தினமும் 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதே சமயம் தனியார் கொள்முதல் அதிகரித்துள்ளது, பால் கொள்முதல் குறைந்து போனதால் இப்போதே ஆவினில் மாதம் தோறும் ரூ.430 கோடி வரை நிதி இழப்பு ஏற்படுகிறது.

இதனை சரி செய்ய பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலையை அளித்தால் மட்டுமே நஷ்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை லாபத்தில் இயங்க வைக்க முடியும் என பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் கூறினார்கள்.

ஆவின் சரியாக இயங்குகிறது என தி.மு.க அரசு கூறி வந்தாலும் களத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூறுவதை வைத்து பார்க்கும் வேளையில் ஆவினிலும் தி.மு.க அரசு விளம்பரம் மட்டுமே செய்கிறது என தெரிகிறது.


Source - Junior Vikatan 

Similar News