தொழில்துறையை ஊக்குவிக்க வரவிருக்கும் நில சீர்திருத்த சட்டங்கள்! மத்திய அரசின் அதிரடி!
நாற்பது ஆண்டுகளாக இந்தியாவின் நிதி தலைமையகமான மும்பையின் நவீன மெட்ரோத் திட்டம் தடைபட்டு வருகிறது. இந்த தாமதம் 4.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளைக் கொண்டு வருவதையும் தாமதப்படுத்தியுள்ளது. நிலச் சிக்கல்களால் தடைபட்ட இந்திய மெகா திட்டம் இது ஒன்று மட்டும் அல்ல; 17 பில்லியன் டாலர் புல்லட் ரயில், 12 பில்லியன் டாலர் எஃகு திட்டம் மற்றும் 700க்கும் மேற்பட்ட சாலை திட்டங்கள் இவற்றில் அடங்கும்.
பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அகற்றி, உள்ளூர் உற்பத்தியை உயர்த்தவும், மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலீடுகளை கட்டவிழ்த்து விட முயல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சீனாவிலிருந்து விநியோகச் சங்கிலிகளை வெளியேற்றி, இந்தியாவில் அவற்றை அமைக்க நிறுவனங்களுக்கு இவை உதவி புரியும்.
இதற்காக நாட்டின் திட்டமிடல் அமைப்பு 'ஒரு புதிய மாதிரி மசோதாவை' உருவாக்கியுள்ளது, இது நிலத்தின் உரிமையாளரை துல்லியமாக பதிவு செய்ய மாநிலங்கள் உத்தரவாதம் அளிக்கும் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும். இது ஆங்கிலேயர் ஆட்சி கால சட்டங்களை மாற்றியமைக்கும். மாநிலங்கள் அனைத்து நிலப் பதிவுகளையும் கணினிமயமாக்க வேண்டும், நில உரிமையாளர்களின் விவரங்களை அந்த டிஜிட்டல் பதிவுகளுடன் இணைக்க வேண்டும் மற்றும் மூன்று ஆண்டுகளுக்குள் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் தீர்க்க தீர்ப்பாயங்களை நிறுவ வேண்டும்.
"இந்த முறை அமல்படுத்தப்பட்டால் வாழ்க்கை எளிதாகிவிடும்" என்று முன்மொழியப்பட்ட சட்டத்தை உருவாக்கிய அரசாங்கக் குழுவின் தலைவர் வினோத் அகர்வால் ப்ளூம்பெர்க் பத்திரிகைக்கு கூறினார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முதல் தென் கொரியா மற்றும் தாய்லாந்து வரை 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இதேபோன்ற முறை உள்ளதாக இவர் கூறுகிறார்.
பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துகிறது எனவே மத்தியில் சட்டத்தை எளிதில் நிறைவேற்ற முடியும் என்றாலும், அதன் வெற்றி, மாநிலங்களில் மாதிரி மசோதாவை அடிப்படையாகக் கொண்டு சட்டங்களை பின்பற்ற வைப்பதில் உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு சில மாநிலங்களில் வலுத்த எதிர்ப்புகளும் போராட்டங்களும், அனைத்தும் சுமூகமாக நடக்காது என்பதைக் காட்டுகிறது.