ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் வெளியேறும் அமெரிக்கப் படைகள் - அமைதி சாத்தியமா?

Update: 2021-03-13 07:41 GMT

அமெரிக்காவின் புதிய அரசாங்கம் ஆப்கானிஸ்தானிற்கான தனது திட்டத்தை ஒருவழியாக அறிவித்துள்ளது. இது டிரம்ப் எங்கே விட்டு சென்றாரோ அதிலிருந்து தொடர்கிறது. ஆப்கான் அரசாங்கத்திற்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆன்டனி ப்லிங்கன் எழுதிய ஒரு கடிதத்தில், நின்று போயிருக்கும் அமைதி பேச்சுவார்த்தை தொடர எடுக்கப்பட வேண்டிய 'நான்கு படி' (four steps) செயல்களை குறிப்பிட்டுள்ளார். இவை வெற்றிபெற வாய்ப்பு இருக்குமா என்பதை ஆராய வேண்டியது அவசியம். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியாவுடைய பங்கு என்ன என்பதையும் பார்க்கலாம்.

இதில் முதல் படி, ஐநா சபை ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். அமைதி பேச்சுவார்த்தைகளை தொடர உதவி செய்ய பொதுவான வழிமுறைகளை விவாதிக்க வேண்டும். இதுதான் முக்கியமான படி. ஏனெனில், இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானின் அரசியல், பொருளாதார, மற்றும் வளர்ச்சிக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை குறித்து ஒருமித்த முடிவு எடுக்க முடியும்.

வெகுகாலத்திற்கு, இந்தியாதான் ஆப்கானிஸ்தானின் கூட்டாளியாக இருந்து, ஆப்கானிஸ்தான் தலைமையில் அமைதிப் பேச்சுக்கள் நடந்து மற்ற பிராந்திய நாடுகளின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்த சந்திப்பில் இந்தியாவை சேர்த்துக் கொண்டிருப்பது, இந்த விவகாரத்தில் இந்தியா வகிக்கும் முக்கியமான பங்கை எடுத்துக்காட்டுகிறது. ஆப்கானிஸ்தானின் நன்மைகளுக்கான நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல நண்பராகவும் இந்தியா செயல்பட வாய்ப்பிருக்கிறது.

இரண்டாவது படி, ஒரு வரைவு சமாதான உடன்படிக்கை. இது ஆப்கானிஸ்தானின் எதிர்கால அரசியல் அமைப்பு, அரசாங்கம், போர் நிறுத்தம் ஆகியவற்றைப் பற்றி தலிபானும், ஆப்கானிஸ்தானிய அரசாங்கமும் இணைந்து விவாதிக்கும் சூழலை உருவாக்கும். இது நிரந்தரமான அரசாங்கம் வரும் வரை ஒரு இடைக்கால அரசாங்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்குவது எப்படி, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை விவாதிப்பதை உள்ளடக்கும்.

மேலும் அரசாங்கத்தின் நீதி துறை, அதை நிர்வகிப்பது எப்படி ஆகியவற்றை குறித்த பரிந்துரைகளை வழங்கலாம். அதிபர் ஆட்சி முறையோ அல்லது பாராளுமன்ற ஆட்சி முறையோ, அனைத்து மாகாணங்களில் இருந்தும் செனேட்டர்களுடன் இருதரப்பு பாராளுமன்றம் என்று பல தேர்வுகள் (options) உள்ளன.

அரசாங்கத்தின் அனைத்து கிளைகளும் தலிபான் உறுப்பினர்களுக்கு இடமளித்து, தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கும் தலிபான்களின் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையே அதிகார பகிர்வுக்கும் இடம் கொடுக்கிறது.

இதில் மூன்றாவது படி, ஆப்கானிஸ்தானுக்கும் தாலிபானுக்கும் இடையே துருக்கியில் ஒரு உயர்மட்ட சந்திப்பு நடத்தி, அமைதிப் பேச்சுவார்த்தை உடன்படிக்கையில் இறுதி முடிவு செய்வது. துருக்கி ஒரு நடுநிலையான மூன்றாவது அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மிகவும் சுவாரஸ்யமானது, ஏனெனில் துருக்கியும் பாகிஸ்தானும் நெருங்கிய கூட்டாளிகள். சமீபகாலங்களில் அவர்களுக்கிடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் கூட்டுறவு அதிகரித்துவருகிறது. மேலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் துருக்கி விமர்சனம் செய்து வருகிறது.

இருந்தாலும், இவர்களுக்கு இடையிலான முயற்சியில் துருக்கி ஈடுபடுத்தப்பட்டு இருப்பதற்கு காரணம் ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவுடன் அதற்கு இருக்கும் நிலையான உறவுகளும், அது ஒரு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு என்பதாலும், NATOவில் ஒரு உறுப்பினர் என்பதாலும், ஆப்கானிஸ்தானிற்கு உதவிகளும் படைகளும் அனுப்புவதில் ஒரு குறிப்பிடத்தக்க நன்கொடையாளர் என்பதாலும் இருக்கலாம்.

இதில் நான்காவது மற்றும் இறுதிப்படி, '90 நாட்களில் வன்முறையை குறைப்பது' என்பது குறித்த ஒரு வரைவு திட்டம் ஆகும். தலிபான்களிடமிருந்து வரும் வன்முறையை குறைப்பது என்பது நேரடியாக ஆப்கானிஸ்தானிய படைகளிடம் இருந்து வரும் வன்முறையை குறைப்பது என்றும் ஆகும். தாலிபான்களிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு முடிவை எதிர் பார்ப்பது கொஞ்சம் அப்பாவித்தனமாக உள்ளது, இது தலிபான்களால் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படாது என்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ப்லிங்கனுடைய கடிதம், புதிய நிர்வாகம் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து மே ஒன்றாம் தேதி திரும்ப அழைத்துக்கொள்ளும் இறுதி முடிவில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு நிதி அளவில் உதவி செய்ய தயாராக இருந்தாலும்,மேலை நாடுகளின் ராணுவம் பின் வாங்கிய உடன் தலிபான் அதிக இடங்களை கைப்பற்றலாம் என்ற கவலையையும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா பின் வாங்கி செல்லாமல் இருப்பது 'டோஹா பின்வாங்கும் ஒப்பந்தத்திற்கு' செய்யப்ப்படும் துரோகமாகும் என்று தலிபான்கள் நினைப்பார்கள். பிப்ரவரி 2020ல் அமெரிக்கா கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் முழுக்க முழுக்க தங்கள் படைகளை வாபஸ் வாங்குவதாக அவர்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதில் சொல்லும் அமெரிக்கா, அல்கொய்தா மற்றும் ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தும் மற்றக் குழுக்களுடன் தலிபான் தங்கள் உறவுகளை முறித்துக் கொண்டால் மட்டுமே பின்வாங்குவோம் என்ற நிபந்தனையுடன் தான் கையெழுத்திட்டதாகவும், இதை தலிபான் எந்த நிலையிலும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.

சொல்லப்போனால், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாள்முதல் தலிபான் வன்முறை அளவுக்கு அதிகமாக வளர்ந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தானிய படைகளும் தயாராகி வருகின்றன. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் தாலிபானுக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லாதது, அமெரிக்க மற்றும் வெளிநாட்டு படையினர் அங்கே இல்லாமல் இருப்பது இன்னும் சில வாரங்களில் ஒரு பிரச்சனையை உருவாக்கி, மறுபடியும் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவது சவாலாகவும் இயலாததாகும் மாறலாம்.

ஆப்கானிஸ்தானின் அமெரிக்க திட்டம், எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்ற அமெரிக்காவின் அவசரத்தையும் இத்தனை வருடங்களாக பெற்று வந்த நன்மைகளை இழந்துவிடக் கூடாது என்ற ஆதங்கத்தையும் தெரிவிக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் அமெரிக்கா வெளியேறிவிடும் என்று அழுத்தத்தினால் தாலிபானுடன் அமைதி ஒப்பந்தத்தை விரைவாக செய்யலாம்.

இதற்கு தற்போதைய அமைதி ஒப்பந்தம் மட்டுமே ஒரே வாய்ப்பு. இந்த புதிய திட்டமும் எந்த அளவு வெற்றி அடையும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறிதான். ஆப்கானிஸ்தானிய அரசாங்கங்களுக்கு இடையிலேயே உள்ள பிரிவுகளும், அரசாங்கம் நடத்துவதில் தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் இருவருக்கும் உள்ள வேறுபாடுகளும், மற்ற பிராந்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பட்ட ஆதாயங்களும், கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க மக்களின் விருப்பமும் சேர்ந்து பிரச்சினையை இன்னும் குழப்புகிறது.

மேலும் ஆப்கானிஸ்தானிய அரசாங்கத்திற்கும் தலிபான்களுக்கும் இடையிலான பல்லாண்டு காலமாக நிலவும் அவநம்பிக்கையும், தற்போது வளர்ந்து வரும் வன்முறையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரிகள் தங்களுடைய பதவிகளை விட்டு தலிபான்களை இடைக்கால அரசாங்கத்திற்கு உள்நுழைய விடுவார்கள் என்பது கற்பனை செய்ய மிகவும் கடினமானக உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு பிராந்திய கூட்டமைப்பில் இந்தியா இருப்பது நல்ல விஷயம் என்றாலும், தற்பொழுது முன்மொழியப்பட்டு இருக்கும் அமைதி திட்டத்தை, இந்தியா அந்த அளவு ஆதரிக்கவில்லை. ஏனெனில், ஒரு இடைக்கால அரசாங்கமோ அல்லது அதிகாரத்தை பகிர்வு செய்யும் அரசாங்கமோ, தாலிபானுக்கு ஆதரவு அளிக்கிறது. இது கிட்டத்தட்ட பாகிஸ்தான் ராணுவ அமைப்பு அங்கே தங்களது இஷ்டத்திற்கு உத்தரவிடுவதற்கு சமமாகும். இது இந்தியாவிற்கு எப்பொழுதுமே ஒத்துவராததாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கும். அமெரிக்காவும் இதை உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Reference: ORF

Tags:    

Similar News