வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு - அரசியலும் பின்னணியும்.!
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு - அரசியலும் பின்னணியும்.!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, தமிழக சட்டசபை வெள்ளிக்கிழமையன்று வன்னியர் சமூகத்திற்கு, MBCக்கள் மற்றும் இதர சமூகங்களுக்கான 20% இட ஒதுக்கீட்டிற்குள் 10.5% ஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்வைத்தார், அது சபையால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், இந்த அமர்வை முழுதாக புறக்கணித்ததால் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அங்கு இல்லை. இந்த மசோதா மேலும் MBC கள் மற்றும் DC களுக்குள் குறிப்பிடப்பட்ட சமூகங்களுக்கு (7%) மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கான (2.5%) உள் இட ஒதுக்கீட்டையும் வழங்குகிறது.
இந்த மசோதா வன்னியர் சமூகத்திற்கான பிரத்யேக இடங்களை மாநிலத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும், மாநில அரசு சேவைகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் வழங்குகிறது.
மாநிலப் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளில் தனித்தனியாக இடஒதுக்கீடு வேண்டியும், கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும் வன்னியர்களிடமிருந்து நிலையான பிரதிநிதித்துவங்கள் இருந்ததாக முதல்வர் பழனிசாமி கூறினார். இட ஒதுக்கீடு சலுகைகளின் சரியான மற்றும் நியாயமான பங்கை அவர்கள் பெறுவது உரிமை என்றும் கூறினார்
இதற்கு வரவேற்பு அளித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், 40 ஆண்டு கால கனவின் முதல் படி நிறைவேறியதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். இதற்கான போராட்டங்கள் குறித்துப் பேசிய மருத்துவர் ராமதாஸ் ".....எனது 40 ஆண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு இந்த சட்டத்தின் மூலம் தான் மனநிறைவு அளிக்கும் வகையில் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 1980-ஆம் ஆண்டில் என்னால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர் போராட்டங்களை நடத்தியது. 1980ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் எனது தலைமையில் இடஒதுக்கீடு கோரி மாபெரும் மாநாடு, 1981 முதல் 1989 வரை தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு சென்று வன்னிய மக்களைச் சந்தித்து சமூகநீதிப் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தியது, 15.03.1984இல் சென்னை மெரினா கடற்கரையில் எனது தலைமையில் மாபெரும் பட்டினிப் போராட்டம், 25.08.1985இல் சென்னை தீவுத்திடல் முதல் கடற்கரை சீரணி அரங்கம் வரை 2 இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி மற்றும் சீரணி அரங்கத்தில் மாநாடு, 06.05.1986 அன்று தமிழ்நாடு முழுவதும் எனது தலைமையில் ஒருநாள் சாலை மறியல் போராட்டம்., 19.12.1986 அன்று எனது தலைமையில் ஒருநாள் தொடர்வண்டி மறியல் போராட்டம், 24.12.1986 அன்று வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; ரயில் மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சேத்தியாத்தோப்பு என்ற இடத்தில் சாலைமறியல் போராட்டம், வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் உச்சகட்டமாக, 17.09.1987 முதல் 23.09.1987 வரை ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது என வன்னியர்களின் சமூகநீதிப் போராட்டம் மிகநீண்ட வரலாறும், தியாகமும் கொண்டது" என்றார்.