டிஜிட்டல் சாதனங்கள் அளவுக்கு அதிகமாக உங்களை அடிமைப்படுத்துகிறதா ?-கட்டுப்படுத்தும் வழிகள்!
டிஜிட்டல் சாதனங்கள் நம்மை அடிமைப்படுத்துவதையும் அளவை தாண்டி உபயோகிப்பதையும் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் சாதனங்களின் உபயோகம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கைகளில் கட்டிக்கொள்ளும் கைக்கடிகாரம் முதல் சமையலறை உபகரணங்கள் வரை அனைத்தும் தற்போது டிஜிட்டல் மயமாகியுள்ளன. இவற்றால் வேலைகள் சுலபமாவதோடு நேரமும் மிச்சமாகிறது. அதேநேரம் தொலைக்காட்சி, மடிக்கணினி, அலைபேசி போன்ற சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதன் காரணமாக உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு பாதிப்புகளும் உண்டாகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது பலரும் டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கியுள்ளனர். இவற்றை அளவோடும் கட்டுப்பாடோடும் பயன்படுத்த வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதன் அடிப்படையில் தினசரி டிஜிட்டல் சாதனங்களை கட்டுப்பாடோடு உபயோகிப்பதற்கான ஆலோசனைகள் பற்றி காண்போம் .
தற்போதைய வாழ்க்கை முறையில் ஸ்மார்ட் ஃபோன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. காலையில் கண்விழிப்பதுமுதல் இரவு தூங்கச் செல்வது வரை ஸ்மார்ட்போன்கள் நம்முடனே பயணிக்கின்றன. அனைத்து செயல்பாடுகளும் அவற்றின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலாவது ஸ்மார்ட் போன் உபயோகிப்பதை தவிர்ப்பதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரங்கள் முன்பாக ஸ்மார்ட் போன் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் .
இணையம், கணினி மற்றும் ஸ்மார்ட் போன் மூலம் ஈ புத்தகங்கள் படிக்கும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினரின் வாசிப்பு ஆர்வம் மகிழ்ச்சிகரமானது தான் .இருந்தாலும் தொடர்ந்து டிஜிட்டல் திரைகளை உற்று நோக்குவதால் கண்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் டிஜிட்டல் திரைகளை பார்ப்பவர்களுக்கு 'ஆஸ்தெனோபியா' என்று அழைக்கப்படும் கண் சோர்வு நோய் உண்டாகும். இதன் மூலம் பார்வை மங்களாவது ,கண்கள் கூசுவது தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.