'திமிறி எழு! திருப்பி அடி!' - கூட்டணி கட்சியிடம் 'பதுங்கி போ' - 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனத்தின் பெயரை சொல்ல பயந்து பம்மிய திருமாவளவன்

'திமிறி எழு! திருப்பி அடி!' என பேனர்களில் மட்டுமே வாசகம் பேசி அரசியல் செய்து வரும் திருமாவளவன் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' என கூறுவதற்கு பயந்து

Update: 2023-01-08 09:39 GMT

'திமிறி எழு! திருப்பி அடி!' என பேனர்களில் மட்டுமே வாசகம் பேசி அரசியல் செய்து வரும் திருமாவளவன் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' என கூறுவதற்கு பயந்து திரையரங்குகள் ஒரு நபர் கையில் கட்டுப்பாட்டில் இருக்கிறது என பொத்தாம் பொதுவாக பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரை உலகில் தற்பொழுது 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' என்கின்ற ஒற்றை நிறுவனம் தான் மொத்தமாக ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 900 திரையரங்குகள் உள்ளன இந்த 900 திரையரங்குகளுமே 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன.

'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' நிறுவனம் எந்த படத்தை வாங்குகிறதோ அந்த படத்தை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற அறிவிக்கப்படாத கட்டளை தமிழக திரையுலகில் இருக்கிறது. இந்த நிலையில் படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளர்கள் வேறு வழியின்றி திரையரங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளதோ அவர் நிறுவனத்திடம்தான் படத்தை விற்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதன் காரணமாக 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்திடம் சென்று தயாரிப்பாளர்கள் மண்டியிடும் நிலை உருவாகிவிட்டது. உதாரணமாக வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவிற்கும் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் படங்களான 'துணிவு' மற்றும் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களுமே தற்பொழுது 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' வசம் உள்ளது.

முதலில் தயாரிப்பாளர் போனி கபூர் 'துணிவு' படத்தை 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' நிறுவனத்திற்கு திரையரங்கு உரிமையை கொடுத்தார். அதன் காரணமாகவே துணிவு படம் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது, செய்திகளும் அடிபட்டது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திற்கு எப்படியாவது திரையரங்குகள் வேண்டும் என தயாரிப்பாளர் 'தில்' ராஜு சென்னை வந்து பேச்சு வார்த்தை நடத்தி பின்பு சென்னை, செங்கல்பட்டு ஏரியா உரிமையை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்'க்கு கொடுத்த காரணத்தினால் 'வாரிசு' திரைப்படத்திற்கும் தமிழகத்தில் திரையரங்குகள் கிடைத்தன.

கிட்டத்தட்ட சத்தமில்லாமல் திரை உலக 'மாபியா' போல் இது நடந்து வருவதால் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு திரைத்துறையினர் குமுறி வருகின்றனர். சிறு பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனத்திடம் விற்கப்படாத படங்கள் அனைத்தும் திரையரங்கு வெளியீட்டை நினைத்துப் பார்க்கவே முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தயாரிப்பாளர்கள் கிடைத்த தொகைக்கு ஓ.டி.டி நிறுவனத்திற்கு விற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தி.மு.க'வின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இது குறித்து பேசுகிறேன் என்ற பெயரில் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் என்ற நிறுவனத்தின் பெயரை வெளியிடாமல் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற 'இரும்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'திரை உலகம் கார்ப்பரேட் மயம் ஆகி வருகிறது, இதனை தடுக்க போராட வேண்டி உள்ளது. எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயம் ஆக்குவது ஆபத்தானது. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்? திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது சமூக நீதிப் பேசியவர் கையில் திரைத்துறை இருக்க வேண்டும்' என பேசினார்.


திரையுலகை இன்று 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் தான் ஆட்சி செய்து வருகிறது என அனைவருக்கும் தெரியும் இருப்பினும் அரசியல் பேசுகிறேன் பேர்வழி என்ற பெயரில் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' மூவிஸ் நிறுவனத்தை குறிப்பிடாமல், பட்டும் படாமல் பேசிய காரணத்தினால் அவர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணியில் இருக்கும் காரணத்தினால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட பயந்து திருமாவளவன் பேசினாரா என கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

Similar News