'நம்ப வச்சு கழுத்தறுத்திடீங்களே முதல்வரே!' - போராட்டத்திற்கு தயாராகும் சத்துணவு பணியாளர்கள்

தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு மையங்களில் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் தி.மு.க அரசு இறங்கியிருப்பதாக தற்பொழுது பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

Update: 2022-12-08 02:44 GMT

தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு மையங்களில் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் தி.மு.க அரசு இறங்கியிருப்பதாக தற்பொழுது பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு மையங்களில் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் தி.மு.க அரசு இறங்கியிருப்பதாகவும், ஒரே பள்ளி வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையங்கள், 3 கிலோமீட்டர் சுற்றளவில் செயல்படும் சத்துணவு மையங்களின் விவரங்களை கணக்கெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு மையங்களில் எண்ணிக்கையை தி.மு.க அரசு குறைக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு கண்டனம் தெரிவிக்கும் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில் இணை இயக்குனர் தலைமையில் சத்துணவு திட்ட அதிகாரிகள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலமாக அனைத்து மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில் பேசிய இணை இயக்குனர் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள், ஒரு குறிப்பிட்ட சத்துணவு மையத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள சத்துணவு மையங்களின் விபரங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் பொதுவான இடத்தில் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளாக சத்துணவு மையம் அமைப்பதற்கு ஏற்ற இடங்கள் குறித்த விபரங்களை வரைபடங்குடன் திரட்ட வேண்டும்.

அவை அனைத்தையும் டிசம்பர் ஐந்தாம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகள், ஆராய்ச்சி அலுவலகத்திற்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் துணை வட்டார அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் பொது சத்துணவு மையம் அமையும் இடத்தை படமாக தயாரித்து அனுப்பி இருக்கின்றனர்.

இந்த விவகாரம் சத்துணவு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் சத்துணவு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக சத்துணவு மையங்களை மூடி ஆட்குறைப்பு செய்து பணியில் இருக்கும் எஞ்சிய சத்துணவு ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறது என குற்றம் சுமத்தியுள்ளனர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர்.

இது குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மலர்விழி கூறியது, 'தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலின் போது தற்காலிக பணியில் இருக்கும் சத்துணவு ஊழியர்களுக்கு அரசு பாணியாளராக்கி ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்படும் என்றும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியவும் பணிக்கொடையாக 5 லட்சம் வழங்கப்படும்' என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்கள் 3 கிலோமீட்டர் அளவில் இடமாற்றமும் செய்யப்படும் என்ற அறிவிப்பும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 43,000 பள்ளி சத்துணவு மையங்களில் 1,29,000 சத்துணவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு தற்போது எடுத்துள்ள முடிவின்படி 85 ஆயிரம் பணியிடங்கள் காலியாகும் நிலை ஏற்படும், எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் ஒழிந்து விடும். எனவே நாங்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை சத்துணவு திட்டம் தற்பொழுது உள்ள நிலையை தொடர வேண்டும் மாறாக திராவிட மாடல் என சொல்லிக் கொண்டு திட்டத்தை சீர்குலைக்க முயற்சித்தால் ஊழியர்கள் வெகுண்டெழுந்து போராடுவார்கள்.

அரசு ஊழியர்களின் விரோத போக்கை கைவிட்டு காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் எங்கள் சங்கத்தில் மாநில செயற்குழுவை கூட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்' என கோபமாக தெரிவித்தார். 


Source - Junior Vikatan

Similar News