"திரையில் கருஞ்சட்டை, நிஜத்தில் காவிசட்டை" - சூர்யா எனும் நடிகன்.!

"திரையில் கருஞ்சட்டை, நிஜத்தில் காவிசட்டை" - சூர்யா எனும் நடிகன்.!

Update: 2020-12-20 14:27 GMT

"சூரரைப்போற்று" - சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த மாதம் அமேசான் ப்ரைம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக  வெளியான திரைப்படம். 'கேப்டன் கோபிநாத்' அவர்கள் தன் வாழ்க்கை அனுபவங்களாக எழுதிய  'சிம்ப்ளி ஃப்ளை' என்ற புத்தகத்தின் தழுவல் என்ற அடைமொழியுடன் வந்த படம். 

தமிழ் திரையுலகில் திரைப்படங்கள் வருவது புதிதில்லை, அதிலும் குறிப்பாக ஒருவரின் வாழ்க்கை தழுவல் என்ற பெயரில் படங்கள் வெளிவருது தவறில்லை ஆனால் படம்'தானே என்ற அலட்சியத்திலும், இப்படி செய்தால் வியாபாரம் வரும் என்ன கீழ்தர வியாபார எண்ணத்திலும் உண்மைக்கு புறம்பாக இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் ஒரு சாராரை மகிழ்விக்கவும், அந்த குறிப்பிட்ட ஒரு சாராரின் விற்பனை பிரதிநிதி போல் அவர்களின் சிந்தனை மற்றும் கொள்கைகளை திரைப்படம் என்ற முக்கிய சாதனத்தின் மூலம் மக்களிடம் விதைக்கவும் படங்கள் வெளிவருவது தவறு.

அதிலும் குறிப்பாக உழைப்பால் உயர்ந்த ஒர் மனிதனின் வாழ்க்கை வரலாற்றை கூறுகிறேன் என்ன பெயரில் அந்த மனிதனின் கதாபாத்திரத்திற்கு கருஞ்சட்டை அணிவித்து தன் இஷ்டம் போல் திரையில் உலாவர விட்டது யாரை சமாதானப்படுத்த? அல்லது யாரை மகிழ்விக்க?

கோபிநாத் என்னும் கதாபாத்திரம் திரையில் கருஞ்சட்டையுடன் வலம் வருவதும், பிண்ணனியில் பெரியார் படத்தை வைத்து திருமணம் செய்து கொள்வதும், திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள் கோலத்தில் பறையடித்து ஆடுவதும் உண்மையான கோபிநாத் கூட கனவில் இதனை நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்.

இப்படி பெரியாரிச கருத்துக்களை புகுத்த திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணியின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கலாமே? ஏன் உழைப்பால் உயர்ந்த கோபிநாத்'ன் வாழ்க்கை? இவ்வாறு படம் நெடுகிலும் பெரியாரை பிராண்ட்'டாக காண்பித்துவிட்டு மக்களிடத்தில் விளம்பரபடுத்தி பிழைத்துவிட்டு மிகச்சமீபத்தில் அதே படக்குழு காளிகாம்பாள் கோவிலில் கழுத்தில் எழுமிச்சை மாலையுடன் வலம் வந்திருக்கிறது.

பிழைக்கவும், பிரபலப்படுத்தவும் பெரியார் மற்றும் கருப்பு படம் முடிந்தவுடன் வேண்டுதலுக்காக கழுத்தில் மாலையுடன் காளிகாம்பாள். அரசியலில் கூட இவ்வாறு "நிறம் மாறிகளை" காண்பதறிது. 

இதுதான் கதாபாத்திரம் இப்படித்தான் எடுக்க இயலும் என இயக்குனர் சுதா கொங்காரா'வால் படம் எடுக்க இயலவில்லை, இதுதானே கதாபாத்திரம் இதில் ஏன் கருஞ்சட்டை மற்றும் பெரியார் என நடித்த சூர்யா'வால் கேள்வி கேட்க இயலவில்லை இப்படி கையாலாகாத தனமாக படம் எடுத்துவிட்டு அரசாங்கம் மக்களுக்காக போடும் திட்டங்களில் மட்டும் இப்படி நூறு குறை சொல்ல எப்படி முடிகிறது இந்த "நிறம் மாறிகளுக்கு"?.

பிழைக்க கருஞ்சட்டை, நிஜத்தில் காவி சட்டை என்று வாழ்வதற்கு பெயர் 'அறமோ', 'அகரமோ' எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் நிஜத்தில் அதன் பெயர் வேறு என மக்கள் கூறுவர்  'நடிகன் சூர்யா' அவர்களே!

Similar News