ஜி ஜிங்பிங்கின் கீழ் தறிகெட்டு ஓடும் சீனா- கடிவாளம் பெறும் நேரமா? #CCP100years

Update: 2021-07-10 00:45 GMT

சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) தொடங்கப்பட்டு கடந்த ஜூலை ஒன்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைக் கொண்டாடும் விதமாக வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். இந்த பிரமாண்டமான நிகழ்வில் 70,000 பேர் கலந்து கொண்டு பாடி, ஆடி, ஆரவாரம் செய்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன அரசும் வலுவானவை, ஒன்றுபட்டவை என்று உலகிற்கு செய்தி அனுப்பும் வகையில் நாடு முழுவதும் பெரிய அளவில் இத்தகைய கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

"சீனாவுடன் மோத முயல்வது "எஃகு சுவர்" உடன் மோதுவதைப் போலாகும்", என்று எதிரிநாடுகளை எச்சரித்தார் ஜி ஜிங்ப்பிங். இவ்வுரை அமெரிக்கா மற்றும் பிற போட்டி நாடுகளிடமிருந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்ளும் சவால்களை தெளிவாகக் குறிக்கிறது.

உலகில் உள்ள வேறு எந்த பெரிய நாட்டையும் விட COVID-19 தொற்றுநோயை சிறப்பாக நிர்வகித்து, தொற்றுநோய் காலம் முழுவதும் உயர் பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டாலும், ஜி ஜிங்பிங்கின் ஆட்சியின் கீழ் உள்ள சீனாவிற்கு உலகத்தின் பல பகுதிகளில் மோசமான பெயர் கிடைத்துள்ளது.

ஹாங்காங்கைக் கையாண்ட விதம், உய்குர்களின் பிரச்சினை மற்றும் COVID-19ற்கு மூல காரணமே சீனா தான் என்ற சந்தேகமும் சீனாவின் பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக, UFWT (United Front Work Department) வழியாக CCPயின் சர்ச்சைக்குரிய பிரச்சாரம் உலகின் பல பகுதிகளிலும் கவலைக்கு ஒரு முக்கிய காரணியாகி விட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்தது கொந்தளிப்பான பயணம் ஆனாலும், 'ஒரு நூற்றாண்டு விழா' என்பது சிறிய சாதனை அல்ல. இது, நீண்ட காலமாக தாக்குப்பிடித்து, விரிவடைந்து அதிகாரத்தில் இருக்கும் CCP இன் திறனை நமக்கு தெளிவாக காட்டுகிறது.

1921 ஆம் ஆண்டில் ஷாங்காயில் 13 பிரதிநிதிகளால் நிறுவப்பட்டது CCP, அவர்களில் ஒருவர் தான் மாவோ சேதுங். அதன் ஆரம்ப காலங்களில் பல இராணுவ பின்னடைவுகளை சந்திக்க நேரிட்டது. இது லாங் மார்ச் என அழைக்கப்பட்டது. இறுதியில் தேசியவாதிகளை தோற்கடித்து 1949 இல் அதிகாரத்தை கைப்பற்றியது.

அதிகாரத்தைக் கைப்பற்ற CCP மேற்கொண்ட போரில் நாடே இரத்தக்காடானது. இந்தப் போராட்டம், அதன் கொள்கைகளையும் சீனாவைக் குறித்த மற்ற நாடுகளின் கண்ணோட்டத்தையும் வடிவமைத்தது.

ஆனால் நாளடைவில் "கிரேட் லீப் ஃபார்வர்ட்" (great leap forward) மற்றும் கலாச்சார புரட்சி (cultural revolution) போன்ற மாவோவின் பல பேரழிவு நிகழ்வுகள் மில்லியன் கணக்கான சீன குடிமக்களின் மரணத்திற்கும் வழிவகுத்தது. 

நெருக்கடியை சரி செய்யும் விதமாக நாட்டிலும், கட்சியிலும் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு மாவோவின் மகத்தான தவறுகளை விரைவாக சரிசெய்ய CCP முயன்றது. டெங் சியாவோப்பிங் என்ற ஒரு திறமையான தலைவரை கண்டுபிடித்தது. "இரண்டாவது புரட்சி" என்று தற்போது அழைக்கப்படும் சீர்திருத்தங்களைத் தொடங்குவதன் மூலம் நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அவர் மாற்றியமைத்தார்.

டெங் தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலை ஒரு 'அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் முதலாளித்துவ மாதிரியின்' கீழ் தொடங்கினார், இது சீனாவின் அபிரிமிதமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது.

இது தான் வறுமையின் கீழ் இருந்த ஒரு ஆசிய தேசத்தை நாற்பது ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. ஒரு பெரிய நகர்ப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தை உருவாக்க அந்நாட்டிற்கு உதவியது. 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து உயர்த்தி, மாவோவின் காலத்தில் இழந்திருந்த நற்பெயரை ஓரளவு பெற்றது. இது, பல மேற்கத்திய ஆய்வாளர்களை கம்யூனிச நாடான சீனா இறுதியில் ஜனநாயகத்திற்கு மாறும் என கணிக்க தூண்டியது.

ஆனால் 2012ல் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜிங்ப்பிங் பதவியேற்றவுடன் இத்தகைய எதிர்பார்ப்புகள் நீர்த்துப் போனது. ஜி ஜிங்ப்பிங், "உங்கள் பலத்தை மறைத்து, சரியான நேரம் வரும் வரை காத்திரு " என்ற டெங் சியாவோபிங்கின் கோட்பாட்டை கைவிட்டுவிட்டார்.

எடுத்துக்காட்டாக, சீனா உலகளாவிய தலைமையை கைப்பற்றி, தன் தனித்துவமான பொருளாதார மாதிரியை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று 2017 ஆம் ஆண்டில் ஜி தனது மக்களுக்கு அறிவுறுத்தினார். "சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசத்தின் வளர்ந்து வரும் பொருளாதார மாதிரி உலகிற்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கும்" என்றும் அவர் கூறினார்.

ஜி பொதுச் செயலாளராக இருந்தபோது அக்கட்சியின் அரசியல் பயிற்சிக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பேராசிரியர் கெய் சியாவின் கூற்றுப்படி, முந்தைய தலைவர்களின் கீழ் ஓரளவு சுயாட்சியை அனுபவித்த கட்சி, ஜியின் கடும்பிடியின் கீழ் வந்துள்ளது. மாவோ மற்றும் டெங்கிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய தலைவராக கட்சி வரலாற்றில் தன்னை நிலைநிறுத்த அவர் திறமையாகவும் உறுதியுடனும் பணியாற்றியுள்ளார். ஆனால் தனது முக்கிய போட்டியாளர்களை அகற்றும் வழிகளையும் அவர் மேற்கொண்டார்.

2017 இல் CCP இன் 19 வது தேசிய காங்கிரசில், ஜி, "டெங் சியாவோப்பிங்கிற்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த தலைவராக" அறிவிக்கப்பட்டார். ஒரு முக்கிய திருப்புமுனையாக 2018 ஆம் ஆண்டில், இரண்டு முறை சீன அதிபராகும் வரம்பை அக்கட்சி ரத்து செய்தது, இது வாழ்நாள் முழுவதும் ஜி ஜனாதிபதி பதவியில் தொடர அனுமதித்தது.

மாவோவின் நீண்ட கால ஆட்சியில் அனுபவித்த சர்வாதிகார ஆட்சியை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த வரம்புகள் ஜிக்காக அகற்றப்பட்டன. கட்சித் தலைவர், அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ராணுவ தளபதி போன்ற பட்டங்களை அவர் சூட்டிக்கொண்டார்.

சீன தலைமை பல்லாண்டுகளாக தங்களின் பொருளாதார செழிப்புக்கு பெரும்பாலும் கவனம் செலுத்தியது. ஆனால் ஜி ஜின்பிங்கின் கீழ், அதன் செல்வாக்கை பரப்புவதற்கு உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதன் அருகிலுள்ள பிராந்தியங்களிலும் தொலைதூர நாடுகளிலும் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது.

வெளிநாடுகளில் தன் செல்வாக்கு நடவடிக்கைகளைத் தொடர ஏராளமான நிதி (ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது) பயன்படுத்த CCP க்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, UFWD மூலம் சீனாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை உபயோகித்து மேற்கத்திய மூலங்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள ஜி திட்டங்களை வகுத்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் சீன செல்வாக்கு நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆஸ்திரேலியா (அரசியல் நன்கொடைகள் மூலம் செல்வாக்கை வாங்குதல்), நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகும். இது அமெரிக்காவில் பெரிய ஒரு பிரச்சினையாக மாறியது, இது முன்னாள் அதிபர் ட்ரம்ப் காலத்தில், கன்ஃபூசியஸ் மையங்களில் மூளை சலவை மற்றும் உளவுவேளைகளில் ஈடுபட்டதாக குற்றசாட்டிற்கு ஆளானது. 

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து,, வறுமையான நாட்டை செழிப்புக்கு முன்னேற்றிய அதன் கடந்த காலத் தலைவர்களின் நடைமுறை பார்வை பாராட்டுக்களுக்கு தகுதியானது. ஆனால் ஜியின் கீழ் உள்ள சீனா எந்த வகையான பெரிய சக்தியாக மாறும் என்பதை குறித்த நியாயமான கவலைகளை எழுப்பியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், பலவீனமான மற்றும் பின்தங்கிய நாட்டை குறுகிய காலத்தில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லரசாக மாற்றிய வெற்றிகரமான கம்யூனிஸ்ட் கட்சி, ஜியின் கீழ் சர்ச்சைக்குரிய காலத்தில் நுழைந்துள்ளது. 

Tags:    

Similar News