கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்ததற்காக மாணவர்களை துன்புறுத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் ! #Chattisgarh
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சரண் மார்கம் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருந்த மாணவர்களை துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டிஸ்கர் தலைநகர் ராய்பூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோண்டாகான் மாவட்டத்தில் உள்ள பண்டபரா கிராம நடுநிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது. ஊடக செய்திகளின்படி, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சரண் மார்கம் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தகவல்களின்படி, இந்த சம்பவம் ஆகஸ்ட் 31, 2021 செவ்வாய்க்கிழமை நடந்தது. 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதாக கிராமவாசிகள் மற்றும் கிராம பஞ்சாயத்து புகார் அளித்தனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உண்ணாவிரதம் இருந்த மாணவர்களைப் பற்றி ஆசிரியர் மார்கம் குறிப்பாக கேட்டதாகவும், பின்னர் கைகளை உயர்த்திய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆசிரியரால் தண்டிக்கப்பட்ட மாணவர்கள் சம்பவத்தை விவரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ண ஜெயந்தியன்று உண்ணாவிரதம் இருந்ததற்காக தாங்கள் தாக்கப்பட்டதாகவும், கிருஷ்ணன் மற்றும் சரஸ்வதி போன்ற கடவுள்களை நம்ப வேண்டாம் என்று ஆசிரியர் கூறியதாகவும் மாணவர்கள் கூறினர்.
செப்டம்பர் 1, 2021 அன்று கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆரம்ப விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின் இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று கலெக்டர் புஷ்பேந்திர குமார் மீனா கூறினார். பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் கிராமவாசிகள், செவ்வாய்க்கிழமை நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும், ஸ்ரீ கிருஷ்ணர் மீது கூறியதாகக் கூறப்படும் ஆபாசமான கருத்துகள் குறித்தும் புகார் அளித்தனர். செய்திகளின்படி, ஆசிரியர் மாணவர்களை அடித்ததோடு மட்டுமல்லாமல் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் குறித்து ஆபாசமாக பேசினார் என்ற குற்றச்ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.