தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மூளைச்சலவை செய்யப்படும் சிறுவர்கள் - இந்தியா கவலை!

Update: 2021-07-07 01:33 GMT

ஐக்கிய நாடுகள் சபையில், உலகம் முழுவதிலும் தீவிரவாதம் சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு குழந்தைகள் அதிக அளவு சேர்க்கப்படும் ஆபத்தான மற்றும் கவலைக்குரிய நிகழ்வுகளை குறித்து இந்தியா கவலை தெரிவித்தது.

இந்தியாவின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரீங்க்லா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் ஆற்றிய உரையின் பொழுது, கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் வேளையில் இப்படி குழந்தைகளை தீவிரவாத நடவடிக்கைகளுக்காக ஆள் சேர்ப்பது கவலைக்குரிய விஷயம் என்றும் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய மோசமான வன்முறையை நடத்தும் மற்றும் தூண்டிவிடும் அனைவருக்கும் தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீங்க்லா இது குறித்து மேலும் கூறுகையில், தீவிரவாத அமைப்புகள் குழந்தைகளை எளிதாக மூளைச்சலவை செய்ய முடியும் என்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று தெரிவித்தார். பள்ளிகள் மூடப்பட்டு இருப்பது இவர்களுக்கு பெரும் வாய்ப்புகளை அளிப்பதாகவும் ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் வன்முறையை அடித்தளமாகக் கொண்ட தீவிரவாத கொள்கைகளை பின்பற்ற குழந்தைகள் மூளைச்சலவை செய்யப் படுவதாகவும் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், குழந்தை பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்த மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை தேவை என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்திருந்தார். நாடுகளும் அரசாங்கங்களும் தீவிரவாதத்திற்கு காரணமானவர்கள் மற்றும் அதற்கு நிதி வழங்குபவர்கள் அனைவரையும் கண்டறிந்து தண்டனை வாங்கி கொடுக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், இந்த சபையின் குழந்தை பாதுகாப்பு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இத்தகைய தீவிரவாத அமைப்புகள் செயல்படும் நாடுகளின் அரசாங்கங்கள் இவற்றை முடிவுக்குக் கொண்டுவர பெரும் முயற்சிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதில் இந்தியாவின் அனுபவத்தை குறித்து கூறுகையில், ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைகளில் பல்லாண்டுகாலம் அனுபவம் பெற்ற இந்தியா, குழந்தை பாதுகாப்பு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான வளங்களும் குழந்தை பாதுகாப்பு ஆலோசகர்களும் தேவை என்பதை உணர்வதாகவும் தெரிவித்தார்.

காஷ்மீரில் குழந்தைகள் மீது பெல்லெட் துப்பாக்கி உபயோகப்படுத்துவதை மறுத்துப் பேசிய அவர், இதுகுறித்து அறிக்கை அளித்த பொதுச்செயலாளர் அண்டனியோ காட்ரெஸ் கருத்தை மறுத்தார். மேலும், உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் விஷயங்களை மற்றும் இந்த ஆயுதப் போராட்டத்தில் குழந்தைகளின் பங்களிப்பை விவாதிப்பதில் இருந்து திசை திருப்பும் விதமாக இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த சபையின் அதிகாரங்களை குறிப்பிட்ட திசையில் மட்டும் விரிவுபடுத்தி நடவடிக்கைகள் அரசியல் மயமாக்கப்படும் முயற்சி எடுக்கப்படுவதாகவும் இது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News