கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளைக் குவிக்கும் சீனா - அதிர்ச்சி தகவல்!
கடந்த வருட செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், சீனா கண்டம் விட்டு கண்டம் தாவும் அணு ஆயுத ஏவுகணைகளைக் (ICBM) குவித்து வருவதாக தெரிவித்திருந்தது. சீனா இதுபோன்ற நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைக் கொண்டிருப்பதாகவும் வரும் காலங்களில் இது இரட்டிப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவை தாக்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கடந்த புதன்கிழமை வெளியான செய்தியில், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட சீனா அதிகமாக ஏவுகணைகளை குவித்து வருவதாகவும், சீனாவின் பாலைவன மாகாணமான கன்சுவில், ஏமன் என்ற சிறு நகரத்திற்கு வெளியே பெரிய அளவிலான கட்டமைப்புகள் (structures) இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இது அமெரிக்க பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஜிலன்ட்டா பகுதியில் இருந்த ஏவுகணை குழிகளை (silos) ஒத்து இருந்தது. ஆனால் ஜிலன்ட்டாவில் ஒவ்வொரு கட்டுமானத்திலும் 16 சிலோஸ் இருந்ததாகவும், ஏமனுக்கு அருகில் இருக்கும் இந்த புதிய கட்டுமானத்தில் 145 இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், சீனாவின் மிகவும் புதியதான DF-41 வகை அணுஆயுத ஏவுகணை வார்ஹெட்சிற்காக கட்டப்பட்ட சிலோஸ் இவை என சந்தேகிக்கின்றனர். இதுவரை சீனா, சுமார் 100 கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் மற்றும் 250 முதல் 350 அணுஆயுதங்களை கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. தற்பொழுது மற்றொரு 145 ஏவுகணை சிலோஸ் கண்டறியப்பட்டது உலகத்தை கவலையடைய செய்துள்ளது.
இத்தகைய சந்தேகத்திற்குரிய இடங்களை நிபுணர் ஜெப்ரி லெவிஸ் மற்றும் இவருடன் வேலை செய்யும் டெக்கர் என்பவரும் ஆய்வு செய்தனர். வடமேற்கு சீனாவில் வர்த்தக செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட இத்தகைய புகைப்படங்களில் முதலில் சிலோசை கண்டறிந்தனர்.
அமெரிக்கா முதலில் தாக்கினால், தாக்குப்பிடித்து அமெரிக்க ஏவுகணை பாதுகாப்புகளை தோற்கடிக்கும் அளவிற்கு சீனா தங்களுடைய அணுவாயுத சக்திகளை விரிவடைய செய்து வருகின்றனர். இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கையில் இத்தகைய சிலோக்கள், சீனா மேலும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை மறைக்க வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்தனர்.