இந்திய அரிசியை 30 வருடம் கழித்து இறக்குமதி செய்யும் சீனா - பின்னணியில் சீன 'உணவு நெருக்கடி'?
இந்திய அரிசியை 30 வருடம் கழித்து இறக்குமதி செய்யும் சீனா - பின்னணியில் சீன 'உணவு நெருக்கடி'?
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உண்மையான எல்லைக்கோடு பகுதியிலும், பொருளாதார ரீதியாகவும் பிரச்சனைகள் நிலவி வரும் வேளையில், 30 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அரிசியை சீனா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு மறைமுகமாக பல தடங்கல்களும், பல சீன ஆப்களுக்கும் இந்திய அரசு தடை விதித்து, இந்திய மக்களிடையே சீனப் பொருட்களின் மேல் வெறுப்பு உண்டான வேளையில், இந்திய அரிசியை இறக்குமதி செய்ய சீனா எடுத்திருக்கும் முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனா வழக்கமாக அரிசி இறக்குமதி செய்யும் நாடுகளில் ஏற்றுமதி குறைந்ததாலும், இந்தியா தன்னுடைய அரிசியை தள்ளுபடி விலையில் அளித்ததும் இதற்கு முக்கியமான காரணங்களாக இருக்கலாம்.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. சீனா தான் மிகப்பெரிய இறக்குமதியாளர் . சீனா ஆண்டுக்கு 4 மில்லியன் டன் அரிசியை உலகெங்கிலும் இறக்குமதி செய்கிறது. ஆனால் இதுவரை இந்தியாவிலிருந்து வாங்குவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வருடம் தான் முதல் முறையாக இறக்குமதி செய்யத் தொடங்கி உள்ளது.
இது குறித்து கூறிய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.வி. கிருஷ்ணா ராவ், இந்திய பயிரின் அதிக தரத்தை பார்த்த பிறகு சீனா அடுத்ததாக மேலும் இறக்குமதியை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கிறார்.
இந்திய வர்த்தகர்கள் டிசம்பர்-பிப்ரவரி ஏற்றுமதியாக, ஒரு லட்சம் டன் அரிசியை ஒரு டன்னுக்கு 300 டாலர் என்ற அளவில் ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தில் உள்ளனர். சீனா வழக்கமாக தாய்லாந்து, வியட்நாம்,மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அரிசி வாங்கும்.