நமது அண்டை நாடுகளுடன் நாம் கொண்டிருக்கும் உறவுகளும் தொடர்புகளும் சிக்கலானது. உருவான நாள் முதல் நம்முடன் விரோதம் பாராட்டும் பாகிஸ்தானையும், நம்முடைய வளர்ச்சியை கட்டுப்படுத்த நினைக்கும் சீனாவையும் அண்டை நாடுகளாக நாம் பெற்றிருக்கும் காரணத்தினால் அதைப் பொறுத்தே மற்ற நாடுகளுடனான தொடர்பு வடிவமைக்கப்படுகிறது. பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் என பிற அண்டை நாடுகளுடனும் நாம் கொண்டிருக்கும் நல்லெண்ண, வெளியுறவு, வர்த்தக உறவுகள் சீனா, பாகிஸ்தானைப் பொறுத்தே பெரும்பாலும் அமைகிறது.
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது? எங்கே செல்கிறது? இந்தியாவிற்கு அதனால் இருக்கும் சவால்கள் என்னென்ன? என்பதை ஆராய்வது அவசியம்.
சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராஜாங்க ரீதியிலான தொடர்புகள் 1951இல் தொடங்கியது. இந்த மே 22, 2021உடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கராச்சி நகரில் அமைந்துள்ள ஒரு அணு ஆயுத ஆலையின் இரண்டாவது யூனிட்டை திறந்து வைத்து பேசினார்.
இந்த ஆலையில் சீனாவால் வடிவமைக்கப்பட்ட ஹுஆலோங் ஒன் ரேடியேட்டரை உபயோகப்படுத்துகிறார்கள். இந்த விழாவில் சீன- பாகிஸ்தான் நட்பின் அம்சங்களைப் பற்றி இம்ரான் கான் மிகவும் புகழ்ந்து பேசினார். சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தை (CPEC) பற்றியும் பேசினார். சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிக்கையும் சீனாவிற்கு நன்றியுடன் இருக்கும் பாகிஸ்தானியர்கள் பேட்டிகளை பிரசுரித்தது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நட்பு "கடலைவிட ஆழமானது, மலைகளை விட உயரமானது, தேனை விட இனிமையானது" என்று பாகிஸ்தானில் பொதுவாகக் கூறப்படும் கருத்தை மறுபடியும் தெரிவித்தார். இந்த விழாவை சிறப்பிக்கும் விதமாக புதிய தபால் தலையும் இஸ்லாமாபாத்தில் வெளியிடப்பட்டது. சீனாவின் சின்குவா நியூசும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் சாதனைகளைக் குறித்து குறும்படங்களை வெளியிட்டது.