கோவை குண்டு வெடிப்பு - பதற வைக்கும் பின்னணி!

கடந்த 23ஆம் தேதி காலை 4 மணியளவில் உக்கடம் பகுதியிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் எதிரே 25 வயதிற்குட்பட்ட ஜமிக்ஷா முபின் என்ற நபர் ஓட்டி வந்த காரில் இருந்த 2 சிலிண்டர்கள் தற்செயலாக வெடித்ததில் கார் தீப்பிடித்து எறிந்து சம்பவ இடத்திலேயே காரில் இருந்த நபர் உயிரிழந்தார்.

Update: 2022-10-26 06:10 GMT

சம்பவம்

கடந்த 23ஆம் தேதி காலை 4 மணியளவில் உக்கடம் பகுதியிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் எதிரே 25 வயதிற்குட்பட்ட ஜமிக்ஷா முபின் என்ற நபர் ஓட்டி வந்த காரில் இருந்த 2 சிலிண்டர்கள் தற்செயலாக வெடித்ததில் கார் தீப்பிடித்து எறிந்து சம்பவ இடத்திலேயே காரில் இருந்த நபர் உயிரிழந்தார். நடந்த சம்பவத்தை பார்த்து அருகிலிருந்தவர்கள் காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு சம்பவத்தை தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை உடனடியாக கட்டுப்படுத்தி உயிரிழந்த ஜமிக்ஷா முபினை அருகிலிருந்த மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மேலும் சம்பவ இடத்தில் 2 கிலோ அளவிலான ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகள் சிக்கின.

டிஜிபி கோவை விரைவு

நடத்த சம்பவத்தை கேள்விப்பட்ட தமிழக டி.ஜி.பி திரு. சைலேந்திர பாபு உடனடியாக கோவை விரைந்தார். சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி, கோவை மாநகர ஆணையர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது என்றார்.

யார் அந்த ஜமிக்ஷா முபின்?

இதில் உயிரிழந்த ஜமிஷா முபின், 25 என்கிற நபர் கோவை கோட்டைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் இவரை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த 2019ஆம் ஆண்டு விசாரித்ததாக தெரியவந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவருடன் முபின் தொடர்பு?

நடத்த சம்பவத்தில் உயிரிழந்த முபின், தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தாக கைது செய்யப்பட்டு கேரளச் சிறையிலுள்ள முகமது ஹசாருதினுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறையிலுள்ள ஹாசாருதின் என்பவர் 2019ல் இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள், சி.சி.டி.வி காட்சிகள்

விசாரணைக்காக காவல்துறையினர் கோட்டைமேடு ஹாஜி முகமது பிள்ளை ரவுத்தார் வீதியிலிருக்கும் முபினின் வீட்டை சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்க்கோல், சல்பர் போன்ற வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் பொருட்களை கண்டுபிடித்து அதை கைப்பற்றினர். மேலும் முபின் வீட்டின் அருகிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர் சம்பவம் நடத்த சில மணிநேரங்களுக்கு முன்பு, அவர் உட்பட மேலும் 4 பேர் அவரது வீட்டிலிருந்து ஒரு மர்ம பொருளை எடுத்துச்சென்றது பதிவாகியுள்ளது. மேலும் காவல் துறையினர் தனிப்படையை அமைத்து அவரின் கூட்டாளிகளும், மற்றும் இதில் சந்தேகத்திற்கிடமாக 5 பேரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணையை நடத்திவருகின்றனர்.

உளவுத்துறை தகவல் மற்றும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தகவல்களும் 

இவ்விவகாரம் தொடர்பாக உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று (24/10/2022) மதியம் 2 மணியளவில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று, இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று செய்தி வெளியிட்டது. அக்டோபர் 25, மதியம் 12 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள், உயிரிழந்த முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் வீட்டை சோதனையிட்ட காவ‌ல்துறையினர் சுமார் 50 கிலோவிற்கும் அதிகமான வெடி மருந்துகள், பேட்டரிகள் கண்டுபிடித்துள்ளது என்று கூறினார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், கோவை கமிஷனரின் பதிலும்

அக்டோபர் 25, மதியம் 12 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள், இதுவரை இவ்விவகாரம் தொடர்பாக முபினின் கூட்டாளிகளை கைது செய்த காவல் துறையினர், ஏன் இதுவரை அவர்கள் எந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கவில்லை? ஏன் தமிழக அரசு இவ்விவகாரத்தில் மௌனம் காக்கிறது? என்று கேள்வி எழுப்பினர். அதை தொடர்ந்து அக்டோபர் 25, மாலை 4 மணியளவில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர் காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன், இத்தாக்குதல் சட்டவிரோத செயல்பாடுகள் சட்டத்தின் (UAPA) கீழ் பதியப்பட்டு மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும், வெடிபொருள் பயன்படுத்தியதால் கார் வெடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

என்.ஐ.ஏ.,விடம் இவ்வழக்கு செல்லுமா?

தமிழக காவல்துறையினர் இவ்வழக்கை UAPA சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் இவ்வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.


Similar News