தொடரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள் - கேள்விக்குறியாகி நிற்கும் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள்
கோவையில் இரு வேறு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இரு வேறு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இங்கு உடற்கல்வி ஆசிரியராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோருடன் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முன்பு திரண்டு ஆசிரியர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
அதனைத்தொடர்ந்து ஆசிரியர் பிரபாகரன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் பொள்ளாச்சி அருகே உள்ள பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக உள்ள பாலச்சந்திரன் என்பவரும் இயற்பியல் ஆசிரியர் ஆசிரியராக பணிபுரியும் ராமகிருஷ்ணன் என்பவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் அப்பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் நடந்த போக்ஸோ விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிறகு பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளிடம் இது போன்ற பாலியல் தொல்லையில் ஈடுபடுவது பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகளை கேள்விக்குறியாக்கி உள்ளது.