"இந்துவாகவே இருந்திருக்கலாம்" - திருச்சபைகளில் தீண்டாமையின் உச்சம். தலித் கிறிஸ்தவர்கள் வேதனை!
இது குறித்து இந்திய தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேத்யூஸ் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் மதம் மாறாமல் இந்து மதத்திலேயே இருந்திருக்கலாம் என்று அவர் கூறியது மதமாற்றத்தின் பின்னணியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
மதமாற்றம் என்பது பெயரளவிலேயே மாற்றம் நிகழ்ந்துள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்தும் மேத்யூஸ், கிறிஸ்தவ மதத்தில் தலித்துகளுக்காக தனிப் பாதை, தனி கல்லறை, தனி சர்ச், தலித் கிறிஸ்தவர்கள் இறந்தால் அவர்களை எடுத்து போவதற்காக தனி சவ ஊர்தி என அனைத்தும் தனித்தனியே இருக்கும் உண்மை நிலையை விவரித்துளார்.
பாதிரியாராக இருப்பவர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்றும் அவர்களை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைப்பதாகவும் தலித் கிறிஸ்தவர்களும் அப்படியே எண்ணி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதிகம் கல்வி கற்கத் தொடங்கிய பின்னர் பாதிரியாராக இருந்தாலும், ஆயராக இருந்தாலும் பேராயராக இருந்தாலும் போப்பாண்டவராகவே இருந்தாலும் கேள்வி கேட்கலாம் என்ற தெளிவு கிடைத்திருப்பதால் தற்போது தங்களுக்கு பிரதிநிதித்துவத்தில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று போராட ஆரம்பித்துள்ளனர்.
ஆயர் மற்றும் பேராயர் களிடையே தலித்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறி கடந்த சில மாதங்களாக தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக புதுவை திருச்சபையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்ளே கூட நுழைய விடாமல் கேட்டைப் பூட்டி வைத்த கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
சாதி பாகுபாடு பார்ப்பவர்களை சாதி கிறிஸ்தவ இந்துக்கள் என்று அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அவர், அவர்கள் மதம் மாறினார்களே தவிர மனம் மாறவில்லை என்று கூறியுள்ளார். இந்து மதத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என்று தொடர்ந்து பெரியாரியவாதிகள் இந்து மதத்தை இழிவுபடுத்தி வருகின்றனர். ஆனால் கிறிஸ்தவ மதத் தலைவர்களே இந்த அளவுக்கு தீண்டாமை மற்றும் சாதிப் பாகுபாடு பார்ப்பதைப் பற்றி பெரியாரியவாதிகள் பேசுவதில்லை.