கியூபாவில் முன்னெப்போதுமில்லாத வகையில் கம்யூனிச அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கேனல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கியூபாவில் சமூக அமைதியின்மையைத் தூண்டுவதற்காக பொருளாதார திணறல் கொள்கையை (policy of economic suffocation) அமெரிக்கா பின்பற்றுவதே இத்தகைய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குக் காரணம்" எனக் குற்றம் சாட்டினார்.
கியூபா, 1962 முதல் அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான கியூபர்கள் ஞாயிற்றுக்கிழமை இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்: "சர்வாதிகாரம் ஒழிக" என்று கோஷமிட்டனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கியூபாவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. நீண்டகாலமாக நிலவும் மின்சாரம் மற்றும் உணவு பற்றாக்குறை மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர், குறைந்தது பத்து பேர் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் போலீஸ் அதிகாரிகள், பிளாஸ்டிக் பைப்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை, பல நூறு போராட்டக்காரர்கள் தலைநகர் ஹவானா வழியாக "எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்" என்று கோஷமிட்டனர், இராணுவம் மற்றும் போலீஸ் இந்த போராட்டத்தை கடுமையாக கண்காணித்தனர். போராட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் கியூபாவில் மொபைல் இன்டர்நெட் பெரும்பாலும் துண்டிக்கப்பட்டது. இத்தகைய போராட்டங்கள் நடத்த கியூபாவில் அனுமதியில்லை. இன்வென்டாரியோ என்ற தளத்தின் படி, மொத்தம் 40 ஆர்ப்பாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன என்று தெரிகிறது.