அனுமதி இன்றி சர்ச் கட்டும் மிஷனரிகள்! துணை ஆட்சியரின் அலட்சியமான பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி!

Update: 2021-02-28 07:37 GMT

ஆந்திர மாநிலத்தில் அதிகரித்து வரும் மிஷனரிகள் தொல்லை அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக கோவில்கள் தாக்கப்பட்டு கடவுள் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. பிரவீன் சக்ரவர்த்தி என்ற மத போதகர், தான் இந்து கடவுள் சிலைகளை காலால் எட்டி உதைத்ததாகவும் மதம் மாறியவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவித்ததாகவும் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து அவர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் சிலை திருட்டு, உடைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்ட போதும் மிஷனரிகளின் அட்டகாசம் தொடர்ந்தே வருகிறது. நந்தியால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களே இல்லாத ஒரு கிராமத்தில் அனுமதி பெறாமல் சர்ச் கட்ட முயன்றிருக்கின்றனர்.

கிராமத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால் மாவட்ட துணை ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்றனர். தங்கள் கிராமத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் இது வரை அமைதியாக வசித்து வந்ததாகவும் புதிதாக அனுமதி இன்றி கட்டப்படும் சர்ச்சால் பிரச்சினை ஏற்படும் என்பதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி புகார் மனு அளித்தனர்.

ஆனால் துணை ஆட்சியரோ பிரச்சினையைக் குறித்து தீர விசாரிக்காமல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கோவில், மசூதி, சர்ச் கட்ட உரிமை உண்டு என்றும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கிறிஸ்தவர்கள் துணை ஆட்சியரின் பதிலை சுட்டிக் காட்டி இந்துக்களை கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையடுத்து இந்த பிரச்சனையைக் கையில் எடுத்த Legal Rights Protection Forum அமைப்பு கிராமத்தார் கொடுத்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட விதி மீறல்களை சுட்டிக் காட்டி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நந்தியால் மாவட்ட துணை ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆந்திர பிரதேச கிராம பஞ்சாயத்து சட்டத்தின் படி புதிதாக ஒரு மத வழிபாட்டுத் தலத்தை கட்டும் முன் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவ்வாறு பெற விண்ணப்பிக்கும் போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலோ, அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்று கருதினாலோ ஆட்சியர் அனுமதி மறுக்கலாம் என்றும் விதிகள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும் அனுமதி இன்றி கட்டப்படும் சர்ச் விவசாய நிலத்தில் கட்டப்படுகிறது என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி விவசாய நிலங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் வேறு பயன்பாட்டுக்கு உபயோகிக்க கூடாது, அப்படி வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிகளை சுட்டிக்காட்டி உள்ளூர் அரசு அதிகாரிகளை அழைத்து விசாரணை செய்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறாமல் சர்ச் கட்டி விதி மீறலில் ஈடுபடுவது கிறிஸ்தவர்களாக இருந்தாலும் துணை ஆட்சியரின் அலட்சியமான பதிலால் இந்துக்கள் குற்றம் செய்தது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிரிவினரையும் சமமாக பாவித்து சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய அரசு அதிகாரிகளே உண்மை நிலவரத்தை தீர விசாரிக்காமல் இவ்வாறு செயல்படுவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News