'ஆபரேஷன் கங்கா திட்டத்தில் செய்த அரசியலை இலங்கை மக்களுக்கு செய்யாதீர்கள்' - ஸ்டாலினுக்கு வகுப்பெடுத்த அண்ணாமலை
உக்ரேன் போரின்போது 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தில் அரசியல் செய்தது போல இலங்கை மக்களுக்கு உதவும் தீர்மானதில் அரசியல் செய்யக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரேன் போரின்போது 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தில் அரசியல் செய்தது போல இலங்கை மக்களுக்கு உதவும் தீர்மானதில் அரசியல் செய்யக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
தற்பொழுது இலங்கை சென்றுள்ள அண்ணாமலை அங்குள்ள சூழலை இந்தியா சார்பில் நேரில் பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு எவ்விதத்தில் உதவ வேண்டும், எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுத்தால் அந்த மக்கள் நிலை மாறும், அவர்களுக்கு முதலில் எது தேவை என்ன என்பதை நேரில் சென்று பார்வையிட்டு பின்னர் அங்கிருந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இலங்கையில் இருந்து தமிழக அரசுக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார் அண்ணாமலை.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ள அண்ணாமலை கூறியதாவது, 'கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் போன்றவற்றை அனுப்பி வைப்பது தொடர்பான அனுமதி கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம்.
இந்த சூழலில் 'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்ற திருக்குறளை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன், வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வகையில் ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தினார் ஆனால் இக்கட்டான அந்த சூழலிலும் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் அரசியல் லாபத்திற்காக இருந்தது அதுபோன்ற நிலையை இந்த தீர்மானமும் ஏற்படுத்தி விடக்கூடாது.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் இருந்த தி.மு.க அரசும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இரு அரசுகளும் வேடிக்கைதான் பார்த்தது ஆனால் போர் நிறுத்தத்துக்கு இங்கே இரண்டு மணிநேர உண்ணாவிரதம் நடத்தி ஒரு மாய கதையை உருவாக்கியது போன்ற சூழ்நிலை இந்த தீர்மானம் ஏற்படுத்திவிடக் கூடாது, குறிப்பாக இந்த தீர்மானத்திற்கு இலங்கைக்கு நமது நாடு வழங்கிய உதவிகள் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை அது துரதிஷ்டவசமானது கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் நிதி உதவியை இந்தியா வழங்கியது, 4 லட்சம் டன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளன, ஒரு பில்லியன் கடன் வசதியின் கீழ் 40 ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.