உரிமம் காலாவதியான "காப்பகத்தில்" தங்க வைக்கப்பட்டாரா தஞ்சாவூர் மாணவி? வாட்டிகன் அனுப்பிய நிதியில் செயல்பட்டதா? - வெளிவரும் உண்மைகள்!
கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி மதம் மாற மறுத்ததால் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவி பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி இருந்ததாக இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், இன்று பள்ளியில் ஆய்வு செய்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அது குழந்தைகள் காப்பகம் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கண்டறிந்துள்ளார். மேலும் கடந்த நவம்பர் மாதமே காப்பகம் செயல்படுவதற்கான உரிமம் காலாவதி ஆகிவிட்டது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.
மாணவி சித்தி கொடுமை தாங்காமல் தான் விடுமுறை நாட்களில் கூட வீட்டுக்கு செல்லாமல் கன்னியாஸ்திரிகளுடன் "விடுதியிலேயே" தங்கியிருந்ததாக பள்ளி தரப்பில் கூறப்பட்டது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக காவல்துறை தரப்பில், கடந்த 2020ஆம் ஆண்டு மாணவி சித்தி தன்னை கொடுமைப்படுத்துவதாக 1098 சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்ததாகக் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவி தற்கொலை செய்ய மதம் மாற வற்புறுத்தப்பட்டது தான் காரணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற ரீதியில் ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன. பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் மகளிர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சரும் விசாரணை முடியும் முன்னரே இந்த வழக்கில் மாணவி மதம் மாற வற்புறுத்தப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று ஊடகங்களில் தெரிவித்தனர்.
இதனால் தங்கள் பக்க நியாயத்தை காவல்துறை விசாரிக்கவில்லை என்றும் தமிழக காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று தோன்றவில்லை என்றும் கூறி மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இதையடுத்து உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் விதி முறைகள் நடைமுறையில் இருப்பதை காரணம் காட்டி மாநில அரசு ஒத்துழைக்க மறுப்பதாக குற்றம் சாட்டியிருந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஜனவரி 30, 31ம் தேதிகளில் மாணவி படித்த தூய இருதய பள்ளி, தங்கியிருந்த விடுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையத்தின் தலைவர் ப்ரியாங் கனூங்கு, மாணவி தங்கியிருந்தது விடுதி அல்ல என்றும், குழந்தைகள் காப்பகம் ஆகவே அது பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.