இயேசு அழைக்கிறார் அமைப்பில் நிதி முறைகேடு? ₹600 கோடி பெற்றதாக வரும் தகவல்கள் உண்மையா?
இயேசு அழைக்கிறார் அமைப்பில் நிதி முறைகேடு? ₹600 கோடி பெற்றதாக வரும் தகவல்கள் உண்மையா?
இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வரும் பிராட்டஸ்டன்ட் மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்திருப்பதாத வந்த தகவலின் அடிப்படையில் சோதனையிடுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
₹1000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு தேர்தல் நிதியாக வழங்க ₹600 கோடி ரூபாய் பெறப்பட்டு இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்த பின்னர் தகவல் வெளியிட்டால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 750 ஏக்கர் பரப்பில் பால் தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சிறுபான்மையின கல்வி நிறுவனம். இதை வெளிப்படையாகவே விளம்பரம் செய்து ₹5 கோடி கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் கூறுகிறது இந்த கல்வி நிறுவனம்.
பிரபல மதபோதகர் டி.ஜி.எஸ் தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட 'இயேசு அழைக்கிறார்' அமைப்புக்கு உலகம் முழுவதும் 126 ஜெப கோபுரங்கள் உள்ளன. தங்களுக்காக ஜெபம் செய்யுமாறு ஒரு மாதத்தில் 5 லட்சம் பேர் இந்த ஜெப கோபுரங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதாக கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு வரை இவ்வாறு தொலைபேசியில் அழைத்து ஜெபம் செய்ய வேண்டுகோள் விடுப்பதை இவர்கள் ஒரு வியாபாரமாக செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தனிநபர், குடும்பம், குழந்தைகள், வேலைவாய்ப்பு, வியாபாரம், மன அமைதி என்று இவ்வாறு ஜெபம் செய்யச் சொல்லி கேட்பதில் பல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களுக்கு கடந்த காலத்தில் பணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் எதிர்ப்பினாலோ அல்லது சம்பாதித்தது போதும் என்றோ பணம் வசூலிப்பதை தற்போது நிறுத்தி விட்டார்கள்.
இவர்களது குடும்பமே, இரு மகள்கள், மகன் மற்றும் மருமகள் உட்பட ஊழியத்தில் ஈடுபடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்கள் எழுதிய புத்தகங்கள், பாடிய இயேசு பாடல்களின் சிடிக்கள், பைபிள் வாசகங்கள் அடங்கிய பேனா, நோட்டு, பை, கீ செயின் என்று வேறு விற்பனை செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் போதாதென்று வெளிநாடுகளிலும் நன்கொடை வசூலிக்கிறார்கள்.