உள்ளூர் மக்களுக்கு தனியார் துறையில் 75% ஒதுக்கீடு வழங்கும் ஹரியானாவின் சட்டம் சரியா? வலுக்கும் எதிர்ப்புகள்!
ஒரு மாதத்திற்கு 50,000க்கும் குறைவான ஊதியம் தரும் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 75 சதவிகிதத்தை உள்ளூரில் வசிப்பவர்களுக்கு ஒதுக்குவதற்கான ஹரியானா அரசாங்கத்தின் புதிய சட்டம் பலவித எதிர்ப்புகளுக்கு ஆளாகியுள்ளது.
ஹரியானா ஆளுநர் சத்யதேவ் செவ்வாயன்று, 'ஹரியானா வேலை வாய்ப்புவழங்கல் மசோதா 2020'க்கு தனது ஒப்புதலை வழங்கியிருந்தார். இது அம்மாநிலத்தில் தனியார் துறையில் உள்ளூரை சேர்ந்தவர் என குடியுரிமை சான்று (domicile certificate) வைத்திருப்பவர்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குகிறது.
தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், கூட்டு நிறுவனங்கள் என்று அனைத்திற்கும் இச்சட்டம் பொருந்தும். ஆரம்பத்தில் இது 10 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் பணியாளரை கண்டுபிடிக்க நிறுவனம் தவறினால் இந்த இட ஒதுக்கீடிற்கு அரசாங்கம் விலக்கு அளிக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டாலும், நிறுவனங்கள் இந்த சட்டத்தின் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்பதும், தனியார் நிறுவனங்கள் தங்களது பதிவு மற்றும் பணியாளர்கள் குறித்த முழுமையான விவரங்களை தங்கள் தளத்தில் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்பதும் நியாயமற்ற கோரிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.
நாட்டின் வளர்ந்து வரும் உற்பத்தி மற்றும் சேவை துறை மையமாக விளங்கும் ஹரியானாவில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை இச்சட்டத்தால் கெடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஒரு காலி இடத்தை நிரப்புவதற்கு சிறந்த திறமைகளை கொண்டவர்களை பணி அமர்த்துவதை இந்த ஒதுக்கீடு தடுக்கிறது. இதில் உள்ளுரை சேர்ந்தவர் நான்காவது, ஐந்தாவது சிறந்த நபராக இருக்கலாம், அவர் உண்மையிலேயே உள்ளூரை சேர்ந்தவர் தானா என்பதை சரிபார்க்க நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டும்.