ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதா? ஒரு பார்வை..!
அரைகுறை மாற்றத்தின் பிழையால் தூத்துக்குடி நகரம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஸ்டெர்லைட் செப்பு ஆலை 2018 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
மனித உரிமைகள் மற்றும் தனிப்பட்ட பொருளாதார உரிமைகளுக்கு எப்படி சம முக்கியத்துவம் தருவது என்பது குறித்த விவாதங்கள் புதிதல்ல. சுற்றுச்சூழல், தனிநபர் பொருளாதார மற்றும் வாழ்வாதார உரிமைகளை எவ்வாறு சமமாக பாதுகாப்பது என்பது இதன் அடிப்படை அம்சமாகும். இந்த பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கும் போது, அரசாங்கத்தின் அனைத்து கொள்கைகளும், முடிவுகளும் பொருளாதார பாதிப்புகளை பொருட்படுத்தாமல் சுற்றுசூழல் பாதுகாப்பின் சார்பாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட முடிவுகள் கேள்விக்குரியது, ஏனென்றால் மக்களின் வாழ்வாதாரங்கள் இதே போன்ற கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தகைய சூழ்நிலைகளில், தொழிற்சாலைகளை நிறுத்த உத்தரவைப் பிறப்பிக்கும்போது, தீமைகளை விட நன்மைகள் அதிகமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
ஒரு வணிகம், தன்னுடைய பங்கு மற்றும் பண மதிப்பினால் மதிப்பிடப்பட்டதில் இருந்து, 'மக்கள், சுற்றுசூழல் மற்றும் லாபம்' என்ற வரிசைக்கு சென்றுவிட்டது. இருப்பினும் அரசாங்க கொள்கை, லாபத்திலிருந்து நேராக சுற்றுசூழலுக்கு நகர்ந்துள்ளது. அந்த மாற்றத்தில், சுவாசிக்க தூய்மையான காற்றைப் போலவே, பொருளாதார பரிமாணங்களும் சம பங்கு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறியதால், ‘மக்கள்’ தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.
இந்த அரைகுறை மாற்றத்தின் தவறான விளைவுகள் தான் தென் தமிழகத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான தூத்துக்குடியில் வெளிப்படுகிறது. அங்கு ஸ்டெர்லைட் செப்பு ஆலை 2018 இல் மூடப்பட்டது. ஸ்டெர்லைட்டுடன் 14 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக இருந்த மோகனுக்கு, அது மூடப்பட்ட பின்னர் நிலையான வேலை மற்றும் வருமானம் எதுவும் கிடைக்கவில்லை. CUTS மையத்தில் பொருளாதாரத்தை பாதித்த நீதித்துறை உத்தரவுகளின் விளைவுகளைப் பற்றி NITI ஆயோக்கிற்காக பிரதீப் மேத்தா, சாக்ஷி ஷா, அமோல் குல்கர்னி மற்றும் கபில் குப்தா ஆகியோர் ஒரு ஆய்வை செய்கிறார்கள். ஸ்டெர்லைட் வழக்கின் களப்பணியின் போது, அவர்கள் மோகனைச் சந்தித்தனர். மோகனுக்கு 30 நாட்களாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய மனைவி குறைந்தபட்ச ஊதியமாக ரூ 200 க்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.