பாகிஸ்தான்: எட்டு வயது இந்து சிறுவன் 'இறைநிந்தனை' புகாரில் கைது ! மரண தண்டனையா?
மரண தண்டனை கிடைக்கக் கூடிய 'இறை நிந்தனை' குற்றச்சாட்டின் கீழ் எட்டு வயது இந்து சிறுவனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதாக குற்றம் சாட்டாத நாளில்லை. ஆனால் பாகிஸ்தானில் உயிர்வாழவே போராடும் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மையினரின் நிலையை சரிபார்க்க அவர் எப்போதாவது முயற்சித்ததாக தெரியவில்லை.
பாகிஸ்தானில் குறிப்பாக சிறுமிகள் கடத்தல், கற்பழிப்பு மற்றும் கட்டாயத் திருமணம் ஆகிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை. இருப்பினும், வெறும் 2.14% (இந்து மக்கள் தொகை) உள்ள மக்கள் மீதான கொடுமைகள் அத்துடன் நிற்கவில்லை. பாகிஸ்தானின் இந்து சமூகங்கள், அவர்களின் வீடுகள், வணிகங்கள் மற்றும் கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
கொடூரங்களின் உச்சமாக, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை கிடைக்கக் கூடிய கடுமையான சட்டமான 'இறை நிந்தனை' (Blasphemy) குற்றச்சாட்டின் கீழ் எட்டு வயது இந்து சிறுவனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. மதராசாவின் தரைவிரிப்பில் சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அச்சிறுவன் கைது செய்யப்பட்டான்.
ஒரு வாரம் சிறையில் கழித்த பிறகே அச்சிறுவனுக்கு பெயில் கிடைத்துள்ளது. தாங்கள் பழிவாங்கப்படுவோம் என அஞ்சி, அச்சிறுவனது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். குடும்பத்தின் ஒரு உறுப்பினர் தி கார்டியன் பத்திரிகையிடம் கூறுகையில்,
"அச்சிறுவனுக்கு இறைநிந்தனைகள் பற்றி தெரியாது, மேலும் அவன் இந்த விஷயங்களில் தவறாக இழுத்துவிடப்பட்டுள்ளான். அவன் செய்த குற்றம் என்ன, அவன் ஏன் ஒரு வாரம் சிறையில் இருந்தான் என்பது அவனுக்கு இன்னும் புரியவில்லை."
"நாங்கள் எங்கள் கடைகள் மற்றும் வேலைகளை விட்டுவிட்டோம், ஒட்டுமொத்த சமூகமும் பழிவாங்கப்படுவோம் என அஞ்சுகிறோம். நாங்கள் இந்தப் பகுதிக்குத் திரும்ப விரும்பவில்லை. குற்றவாளிகளுக்கு எதிராக அல்லது இங்கு வாழும் சிறுபான்மையினரைப் பாதுகாக்க எந்தவொரு உறுதியான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரியவில்லை," என்று கூறினார்.