ஆப்கானிஸ்தான்: வாழ்வின் விளிம்பில் இந்து, சீக்கியர்கள்- இந்தியா கைகொடுக்குமா?
சமீபத்தில் நடந்த நிகழ்வுகள், மற்ற கலாச்சாரங்கள் மற்றும் இந்தியாவை நோக்கி தலிபான்கள் ஆக்ரோஷமாக இருப்பதை காட்டுகின்றன.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் 85 சதவிகிதத்தை ஏற்கனவே கைப்பற்றியதாகக் கூறும் தலிபான்கள், அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகிறார்கள். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தி, குழந்தைகளை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி, பெண்களைக் கடத்தி, பாலியல் அடிமைத்தனத்திற்கு கட்டாயப்படுத்துகிறது.
ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினர் எப்போதும் தலிபான்களின் துப்பாக்கி முனையில் இருந்தனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் கூட, தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது, அவர்களின் வழிபாட்டு இடம் அழிக்கப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டு விடும் என்ற அச்சுறுத்தலிலேயோ உள்ளது.
மார்ச் 2001 இல் தாலிபான் தலைவர் முல்லா முகமது உமர், பாமியனில் உள்ள ஆறாம் நூற்றாண்டு பழமையான புத்தர் சிலைகளை வெடிக்க வைக்க உத்தரவிட்டார். இதன் மூலம் தலிபான், சிலை வழிபாட்டிற்கு எதிரானது, ஷரியாவை மறுக்கும் எவரையோ அல்லது இஸ்லாம் தவிர வேறு எந்த மதம், நடைமுறையை பின்பற்றுபவரையோ விடாது என தெளிவுபடுத்தியது. .
கடந்த வாரம், தலிபான்கள் சீக்கிய மதக் கொடியை - நிஷான் சாஹிப் - குருத்வாரா தல சாஹிப்பின் கூரையிலிருந்து அகற்றினர். பின்னர், இந்தியா இந்தச் செயலைக் கண்டித்தபோது, ஆகஸ்ட் 6 அன்று அது மீட்டெடுக்கப்பட்டது.
கடந்த மாதத்தில் நடந்த இந்த நிகழ்வுகள், மற்ற கலாச்சாரங்கள் மற்றும் இந்தியாவை நோக்கி தலிபான்கள் ஆக்ரோஷமாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தலைவராக பொறுப்பேற்ற பிறகு, ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது மற்றும் தலிபான்களின் ராணுவ தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகை கணக்கைப் பார்க்கும் போது, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆப்கான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் கொல்லப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். தலிபான்களின் எழுச்சி காரணமாக மீதமுள்ள மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.