ஹாங்காங்கின் ஜனநாயகத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த சீனா- உலக நாடுகள் கண்டனம்!
சீனாவின் பாராளுமன்றம் வியாழக்கிழமை அன்று ஹாங்காங்கில் தேர்தல் முறையை மாற்றுவதற்காக வாக்களித்தது. இதில் வேட்பாளர்களை வீட்டோ (Veto) செய்யும் அதிகாரமும் உள்ளடங்கும். அதாவது 'தேசபக்தர்கள்' மட்டுமே தேர்தலிலேயே நிற்க முடியும்.
சமீபத்தில் ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்கு ஆதரவான பேரணிகளில் கலந்து கொண்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடங்களில் ஹாங்காங்கின் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்ட என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்திருக்கிறது சீனா.
ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களை அடக்கி ஆள்வதில் சீனாவுடைய கொடூரத்தை உலகம் முழுவதும் பார்த்தது. கடந்த வருடம் தேசிய மக்கள் காங்கிரஸ் (சீன பாராளுமன்றம்) ஒரு தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. இதுதான் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டத்தை தூண்டிவிட்டது.
வியாழக்கிழமை அன்று சீனாவின் பாராளுமன்றத்தில் 2896 உறுப்பினர்களில் ஒரே ஒருவர் மட்டுமே ஓட்டளிப்பதில் இருந்து விலகி இருந்ததாகவும் இதுதான் ஹாங்காங் ஜனநாயக இயக்கத்தின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் கடைசி ஆணி என்றும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் முதல் பல போராளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடி அதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1997ல் சீனாவிற்கு ஹாங்காங்கை திருப்பி அளித்தது இங்கிலாந்து. இங்கிலாந்துக்கு கீழ் அரசியல் சுதந்திரத்தை அனுபவித்தது ஹாங்காங். சீனாவிற்கு ஒப்படைக்கப்படும் முன் 'ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்' என்ற முறை செயல்படுத்தப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் அமைப்பை மாற்ற முடிவு செய்தது சீனா. 'தேசபக்தர்கள்' மட்டுமே ஹாங்காங் மேல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று சீன பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்கள்தான் இந்த 'தேச பக்தர்கள்' யார் என்பதை முடிவு செய்வதில் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்று மூத்த சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.