தடுப்பூசி மூலம் ஆதரவுக் கரம் நீட்டும் இந்தியா- பல நாடுகளில் நெகிழ்வான தருணங்கள்! #VaccineMaitri
வியாழக்கிழமை வரை, இந்தியா 47 நாடுகளுக்கு 464. 29 லட்சம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட (மேக் இன் இந்தியா) கோவிட் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இது உலகின் பல பகுதிகளிலும் இந்தியாவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.
இந்தத் தடுப்பூசிகளின் 71.25 லட்சம் பரிசாகவும், வணிக ரீதியாக 393.04 லட்சம் டோஸ்களும் வழங்கப்பட்டது. இந்தியாவின் தடுப்பூசிகளை பெற்ற நாடுகளில் வளர்ந்த நாடுகள் தொடங்கி, வளரும் நாடுகள் வரை உள்ளன. ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியன் வரை, ASEAN நாடுகளில் இருந்து அண்டை நாடுகள் வரை இந்தியாவின் தடுப்பூசிகளை பெற்று வருகின்றன.
புதன்கிழமை அன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கனடாவை சென்று சேர்ந்தன. கனடா 5 லட்சம் டோஸ்களை பெற்றது. இந்தியாவில் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மேலும் 1.5 மில்லியன் டோஸ்களை கனடாவிற்கு அனுப்ப உள்ளது. இதுகுறித்து கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், கனடாவின் தடுப்பூசி திட்டத்தில் ஒரு முக்கிய கூட்டாளியாக ஆதரிப்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று கூறினார்.
இந்தியாவின் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்று CARICOM, அதாவது கரீபியன் நாடுகளான பார்படாஸ், டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், செயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்புவதாகும்.
இந்தியாவின் தாராள மனப்பான்மையை பாராட்டிய ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் காஸ்டன் பிரவுன், சமீபத்தில் உலக தலைவர்கள் யாருடைய நடவடிக்கையுடனும் ஒப்பிடும் பொழுது பிரதமர் நரேந்திர மோடிதான் மிகவும் குறிப்பிடத்தக்க கருணை, தாராள மனப்பான்மை, பச்சாதாபம் ஆகியவற்றை காட்டியுள்ளார் என்று புகழ்ந்தார். கடந்த 100 வருடங்களில் தங்கள் நாடு பார்த்த மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் இது எளிதில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார்.