இந்தியா தனது அண்டை நாடுகளுடன் சிறப்பான நல்லுறவை மேம்படுத்த பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், அதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான், சீனாவின் அடிமை போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நேபாள அரசியலில் சீனா நுழைந்து குட்டையை குழப்பி, இப்பொழுது அந்த நாடு அரசியலமைப்பு நெருக்கடியில் தவித்து வருகிறது.
தற்பொழுது இலங்கையில் முதலீடுகள் செய்து அதன் மூலம் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த சீனா முயன்று வருகிறது. இது இலங்கையின் பாதுகாப்பு, அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கும் சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய இலங்கை அரசாங்கம் அதற்கு அடிபணிந்து வருவது போல் தெரிகிறது. இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த சர்வதேச பாதுகாப்பு மற்றும் புவி சார் அரசியல் (geopolitics) ஆய்வாளர் அசங்கா அபேயாகுணசேகரா ORF ல் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன் தமிழ் சாராம்சம் பின்வருமாறு.
இலங்கையின் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) இந்தியாவிற்கு குத்தகைக்கு விடுவதாக ஒப்பந்தம் இருந்தது. இதனை கோத்தபாய ராஜபக்க்ஷேவின் அரசாங்கம் ரத்து செய்தது. உள்நாட்டு தொழிற்சங்கங்கள் அரசியல் மயமாகி இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசியல் ரீதியாக செல்வாக்குப் பெற்ற தொழிற்சங்கத்தின் வெற்றிகள், தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் இருந்து விலகி அரசாங்கத்த்தை மோசமான பாதைக்கு அழைத்து செல்கிறது.
வெளிநாட்டு சக்திகள் இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கைப்பற்றும் என்று இலங்கையில் பீதி கிளப்பப்பட்டது. ஆனால் இதே அரசாங்கம் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கிய போது இந்த அச்சமில்லை. இது நோய்வாய்ப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கீழே இழுத்துச் செல்லும்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு வெற்றிகரமான தனது வருகையை சமீபத்தில் முடித்துக்கொண்டார். இலங்கையின் பிரபல செய்தித்தாள் தி சண்டே டைம்ஸ் இந்த ECT துறைமுகத்தின் ஒப்பந்தத்தை குறிப்பிட்டுப் பேசுகையில், சீனா மட்டுமே இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல தடையாக இருப்பதாக தெரிவித்திருந்தனர்.