இந்தியா, தலிபான்களுடன் வெளிப்படையான உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வாதாடும் பலரும் பாகிஸ்தானுடனான தலிபான் உறவை இது சிக்கலாக்கும் என்றும், இது இந்தியாவிற்கு சாதகமானது என்று கூறுகிறார்கள்.
மேலும் வெளியுறவு கொள்கைகளை பொருத்தவரை, கொள்கைகளை விட நமது நாட்டின் நலன்களுக்கு எது உகந்ததோ அதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று வாதாடும் கட்சியினரும் உள்ளனர். கடந்த சில நூற்றாண்டுகளாக மேற்கத்திய நாடுகளின் ஆளுமை சர்வதேச விவகாரங்களில் இருப்பதால், நாடுகளுக்கென்று நிரந்தரமான நண்பர்களும் இல்லை ,எதிரிகளும் இல்லை. தங்களுடைய நலனே நிரந்தரம் என்ற கொள்கை தான் பெரும்பாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் வெளியுறவுக் கொள்கை என்பது எந்தவித கொள்கைகளோ, நல்லெண்ணமோ, ஒழுக்கமோ இல்லாமல் தான் இருக்க வேண்டுமா? நலன்களும் ஒழுக்கமும் ஒன்றுகொன்று சம்பந்தம் இல்லாததா? ராஜ ரீதியிலான உறவுகள் ரொம்பவும் கெடுபிடியாக இருக்கக் கூடாது தான். ஆனால் எந்த ஒரு நாகரீகமான சமுதாயமும் தலிபான்களின் கொள்கையையும் வன்முறையையும் ஏற்றுக் கொள்ளலாமா?
தலிபான்களை இன்றைக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்றால் ISISஐ நேற்றைக்கு ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம்? அதிகாரமும், வெற்றியும், சக்தியும் மட்டும்தான் வித்தியாசமா? தலிபான்களை முழுவதுமாக வெற்றி கொள்ள முடியாமல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறது. எனவே அனைத்து நாடுகளும் தலிபான்களுடன் ஒப்பந்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டதா? ஒருவேளை ISIS தோற்கடிக்கப்படாமல் இருந்திருந்தால் அதனுடனும் உலக நாடுகள் ஒப்பந்தம் பேசிக் கொண்டு இருக்குமா?
உண்மையில் பல நாடுகள் உள்ளூர் அளவில் அப்படியான ஒப்பந்தங்களில் ரகசியமாக ஈடுபட்டனர். ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் சொந்த நலன்கள் மட்டுமே தான் முக்கியம் என்றால் இதை ஒப்புக் கொள்வதில் என்ன தயக்கம் உள்ளது?
தலிபான்களை பொருத்தவரை அவர்களை தூரத்தில் வைத்து, அவர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்யக்கூடாது என்று ஒரு வாதம் இருக்கிறது. அதாவது அவர்கள் நாகரீகமான சமுதாயத்தில் பேச்சுவார்த்தைக்கு அமரும் தகுதியைப் பெறும் வரை எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் தலிபான்கள் தங்களுடைய காட்டுமிராண்டி தனத்திலிருந்து கொஞ்சமாவது முன்னேறி நாகரீகமான சமுதாயத்துடன் தொடர்பில் இருக்கும் தகுதியை அடைந்துள்ளனர் என்பதற்கு தற்போது வரை எந்த வித ஆதாரமும் இல்லை.
மனித நேயத்திற்கு எதிராக தலிபான்கள் சொல்லக்கூடாத குற்றங்களை இழைத்து வருகிறது என்ற செய்திகள் தினமும் வந்த வண்ணம் உள்ளது. சரணடையும் ஆப்கானிஸ்தானில் ராணுவ படையினரை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் கொன்று தள்ளியது, தலிபான்கள் கைப்பற்றிய பகுதிகளில் உள்ள குடிமக்களை கொத்துக்கொத்தாக கொன்றது, 15 லிருந்து 45 வயதிற்குள் இருக்கும் பெண்களின் பட்டியலை கேட்டது. ஒரு இளம்பெண் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ ஆகியவை தலிபான்கள் மற்றும் தலிபான்களை ஆதரிக்கும் பாகிஸ்தானும் எதற்குப் பிரதிநிதிகள் என்பதற்கு சிறிய உதாரணமாகும்.
அப்படிப்பட்ட ஒரு கொடூரமான ராஜ்ஜியத்திற்கு மக்களும் எந்த நாடும் எப்படி அங்கீகாரம் அளிக்க முடியும்? இந்தியாவிற்கு எந்த தேச நலன்களையும், பாதுகாப்பு நலன்களையும் இத்தகைய ராஜ்ஜியம் வழங்கும்? இல்லையென்றால் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்திலிருந்து இந்தியா ஓரங்கட்டப்படும் என்று 'மூலோபாய நிபுணர்கள்' தொடர்ந்து கருத்து கூறுகிறார்கள். ஆனால் 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதாரம் மற்றும் 1.3 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடு இப்படி ஒரு ராஜ்யத்தால் ஓரங்கட்டப்படும் என்ற கருத்துக்கள் தான் நகைப்புக்குரியது.
ஆப்கானிஸ்தானில் என்ன செய்யமுடியுமோ அதை செய்ய இந்தியா தவறியதில்லை. 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியிலிருந்த காலகட்டத்தை தவிர கடந்த 75 வருடங்களாக இந்தியா, ஆப்கான் மக்களின் நட்பையும் நல்லெண்ணத்தையும் இருந்து சம்பாதித்து வருகிறது. 1979 இல் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது இந்தியாவிற்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றாலும், அந்த காலகட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானில் பெரும் செல்வாக்குடன் இருந்தது.
1992-ல் முஜாகிதீன் புதிய அரசாங்கத்தை உருவாக்கிய போது கூட புதிய ராஜாங்கம் இந்தியாவை உடனே தொடர்பு கொண்டது. இந்தியா ஐந்து வருடங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு ஓரளவிற்கு வெளியே இருந்தாலும், மறுபடியும் 2001 முதல் கடந்த 20 வருடங்களாக இந்தியா அங்கே தொடர்புகளைக் கொண்டுள்ளது.
இந்த இருபது ஆண்டுகளாக ஆப்கன் மக்களின் நல்லெண்ணத்தையும் ஆதரவையும் பெற பெரும் முயற்சி எடுத்து வருகிறது என்பது மற்றொரு விஷயம். பாகிஸ்தான், தங்களுடைய ராணுவ அதிகாரத்தை உபயோகித்து ஆப்கானிஸ்தான் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது. பாகிஸ்தானுக்கு தற்போது அனுகூலம் போல் தோன்றினாலும் அது பிற்காலத்தில் திருப்பியடிக்கும்.
பாகிஸ்தான் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவதனாலேயே வேறு வழியில்லாமல் இந்தியாவுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கும். தங்களுடைய குறைபாடுகள் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் அளவுக்கு அதிகமாக பாகிஸ்தான் தலையிடுவது கூடிய சீக்கிரத்தில் அதற்கே பிரச்சினையாய் வந்து முடியும்.
ஒரு கொடூரமான ராஜ்யம் திடீரென வந்து, இந்தியாவின் இருப்பிற்கு அங்கே பிரச்சினைகள் ஏற்படுமானால் இந்தியா பயப்படத் தேவையில்லை. தொடர்பு கொள்ளும் அளவிற்கு தங்களுடைய தகுதியை தலிபான்கள் நிரூபித்த பிறகு இந்தியா அதைப் பற்றி யோசிக்கலாம்.
அதிகபட்சம் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் இந்தியா ஓரங்கட்டப்பட்டாலும் இந்தியா கொஞ்சம் பொறுமையை கடைபிடித்து நிலைமை மாறும் வரை காத்திருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் நிலைமை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. விஷயங்கள் கூடிய சீக்கிரம் மாறும்.
தலிபான்கள் களத்தில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை ஆராயாமல் அவர்களுடன் தொடர்பு கொள்வது இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதாகாது. தலிபான் தொடர்ந்து திருந்தாமல் தான் இருந்தால் இந்தியா அவர்களுடன் தொடர்பு கொள்வதால் பலவற்றை இழக்க நேரிடுமே தவிர, பெரிய லாபமிருக்காது.
அதிகபட்சம் இந்தியா தங்களுடைய தூதரகத்தை ஆப்கானிஸ்தானில் வைத்துக்கொள்ள இயலும். அவ்வளவுதான். ஆனால் தலிபான்கள் பாகிஸ்தானியர்களால் ஆட்டுவிக்கப்பட்டால் அந்த தூதரகத்தினால் எந்த பிரயோஜனமும் இருக்காது. பல ஜனநாயக நாடுகள் மனித உரிமைகளை பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும் தற்பொழுது தலிபான்களுடன் தொடர்புகொள்ள முண்டியடித்துக் கொண்டு செல்வதைப் போல் இல்லாமல் இந்தியா ஆப்கானிஸ்தான் மக்களுடன் துணை நிற்க வேண்டும். இத்தகைய பொறுமை வருங்காலத்தில் இந்தியாவிற்கு பலன்களை பெற்றுத்தரும்.
With Inputs From: ORF
Image Courtesy: Global Village Space