உலகின் இரண்டாவது பெரிய குழந்தைகள் ஆடை உற்பத்தியாளரான கிடெக்ஸ் குழுமம் கேரளாவில் திட்டமிட்டிருந்த 3,500 கோடி ரூபாய் திட்டத்தை ரத்து செய்வதாக ஜூன் 30 ஆம் தேதியன்று அறிவித்தது. முன்னதாக ஜனவரி 2020ல் கொச்சியில் நடந்த 'அசென்ட் குளோபல் முதலீட்டாளர்கள் சந்திப்பில்' கேரள அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கிடெக்ஸ் குழுமம் கையெழுத்திட்டிருந்தது. கொச்சியில் ஒரு ஆடை பூங்காவைத் திறந்து திருவனந்தபுரம், கொச்சி மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் தொழில் பூங்காக்களை நிறுவுவதற்கான திட்டம் இருந்தது.
இது குறித்துப் பேசிய கிதெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சாபு ஜேக்கப், கம்யூனிஸ்ட் அரசாங்கம் மற்றும் அதன் அதிகாரிகளிடமிருந்து இடைவிடாத பிரச்சினைகளை எதிர்கொண்டதாகக் கூறினார். தொழிலாளர் துறைகள், தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஒரு குழு ஆகிய மூன்று பிரிவுகளும் பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி தங்கள் வளாகத்தில் தேடல்களை நடத்தி வருவதாகவும், இது நிறுவனத்தை களங்கப்படுத்தி, அதன் ஊழியர்களை மனச்சோர்வடையச் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
கேரள அரசால் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதால் தான் சோர்ந்து போயிருப்பதாக சாபு ஜேக்கப் கூறினார். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசாங்கம் தன் நிறுவனத்தை சுரண்டல் முதலாளிகள் மற்றும் நில ஆக்கிரமிப்பாளர்களாக கருதியதாக அவர் கூறினார்.
"உலகம் மாறிவிட்டது, ஆனால் கேரளா 50 ஆண்டுகள் பின்னால் உள்ளது. நிலைமை இப்படி தொடர்ந்தால், மாநிலம் (கேரளா) தொழில்களின் மயானமாக மாறும்… .இப்போது இருக்கும் காலநிலை தொழில்முனைவோரை தற்கொலைக்கு தள்ளும். எங்கள் இளம் தலைமுறையினருக்கு (கேரளாவில்) வேலைகள் இல்லாததால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். சுமார் 6.1 மில்லியன் கேரளர்கள் மாநிலத்திற்கு வெளியேயும் வெளிநாட்டிலும் பணியாற்றுகிறார்கள்" என்று சாபு ஜேக்கப் பத்திரிகைகளுக்கு தெரிவித்தார்.