காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பரவும் வதந்திகள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை. இந்திய- பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு அமைப்பின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் ஒரு ரகசிய சந்திப்பு நடந்தது நடந்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வதந்திகள் பரவி வந்தது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இஸ்லாமாபாத் சென்றதாக கூட வதந்திகள் பரவியது. இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. மற்றொன்று, இரு நாடுகளுக்கும் திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியது. ஆனால் இந்த முறை வதந்திகள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்திய-பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் (LoC) மற்றும் சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன. இது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர்கள் (DGMO) தொலைபேசி அழைப்பின் பின்னால் போர்நிறுத்தத்த ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
வன்முறைக்கு வழி வகுக்கும் மற்றும் அமைதியை குலைக்கும் விஷயங்களைக் குறித்த சர்ச்சைகள் மற்றும் கவலைகளை விவாதிக்க இருநாட்டு ராணுவத்தினர் ஒப்புக் கொண்டதாகவும் கூறினர்.
இத்தகைய கூட்டு அறிக்கைகள் வெளியான சில பல மணி நேரங்களுக்கு பின்னர், ஒரு இந்திய தேசிய பத்திரிகை, இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு துணை உதவியாளர் மொயீத் யூசப் இடையிலான திரைக்குப் பின் நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்தது.
இந்த அறிக்கை இந்த இரண்டு அதிகாரிகளும் ஒருமுறையாவது ஏதாவது ஒரு மூன்றாவது நாட்டில் சந்தித்ததாகவும் உறுதிசெய்தது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர இந்த அறிக்கைகளும், பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமரின் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.