தி.மு.க'வில் கனிமொழி ஆதரவு பெருகுகிறதா? என்ன நடக்கிறது?

திமுக'வில் ஆங்காங்கே கனிமொழியை தலைவராகவும், அவரை கிட்டத்தட்ட முதல்வர் பதவிக்கு இணையான பதவியில் அமரவைக்கவும் மெல்ல சலசலசப்புகள் எழ துவங்கிவிட்டன.

Update: 2023-01-08 09:38 GMT

திமுக'வில் ஆங்காங்கே கனிமொழியை தலைவராகவும், அவரை கிட்டத்தட்ட முதல்வர் பதவிக்கு இணையான பதவியில் அமரவைக்கவும் மெல்ல சலசலசப்புகள் எழ துவங்கிவிட்டன.

திராவிட முன்னேற்றக்கழகத்தில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தலைவர் பொறுப்பில் இருந்தவர் கருணாநிதி, இறுதியில் தான் மரணப்படுக்கையில் இருக்கும் தருவாயில் கூட தன் தலைவர் பதவியை யாருக்கும் விட்டுத்தராதவர், இவ்வளவு ஏன் எனக்கு பிறகு இவர்தான் என யாரையும் சுட்டிக்காட்டாதவர்.

அதற்க்கு காரணமாக பதவி ஆசை என சிலர் கூறலாம், இன்னும் சிலர் வேறு காரணங்கள் கூறலாம்! ஆனால் உண்மை அதுவல்ல மறைத்த கருணாநிதிக்கு திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை பற்றி நன்கு தெரியும் அதைவிட தனது குடும்பத்தை பற்றியும் நன்கு தெரியும். அந்த காரணத்தினால் தான் தன் இறுதி மூச்சு இருக்கும் வரை தனக்கு பிறகு யார் என்பதை அறிவிக்காமலே சென்றார் கருணாநிதி!

பின்னாளில் ஸ்டாலின் திமுக தலைவர் பொறுப்பிற்கு வந்தார், அதனைதொடர்ந்து வந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது, ஆட்சி கட்டிலில் திமுக அமர்ந்து 20 மாதங்கள் ஓடிவிட்டன இந்த நிலையில் தான் யார் கையில் திமுக எதிர்காலம் என்பதில் சலசலசப்புகள் எழுந்துள்ளது.

நேற்று தனது 55வது பிறந்தநாளை கருணாநிதியின் மகளும், திமுகவின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கொண்டாடினர். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன, அதில் குறிப்பிடத்தக்க வாழ்த்து போஸ்டர் வடிவத்தில் திமுக'வில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை செயலகம் பின்னணியில் கனிமொழி கோப்பில் கையெழுத்திட அவரை சுற்றி ஈ.வே.ரா, அண்ணாதுரை, கருணாநிதி பக்கபலமாக இருக்க ஏன் தற்பொழுதைய முதல்வர் ஸ்டாலினே நின்று கொண்டு அவருக்கு ஒத்துழைக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது சர்ச்சைக்கு தீப்பொறியாக அமைந்துள்ளது. இதே போஸ்டரை திமுக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது கருணாநிதியின் மூன்று முக்கிய அரசியல் வாரிசுகளான அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரில் தற்பொழுது முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். கனிமொழி எம்.பியாக இருக்கிறார். அழகிரி அரசியலில் இல்லை.

இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பம்தான் முழு அதிகாரத்தை கையில் வைத்துள்ளது, கனிமொழிக்கு அதிகாரமில்லை. இந்த நிலையில் திமுக கடவுள் மறுப்பு, தமிழ், மாநில அந்தஸ்து போன்றவற்றை பேசி இயக்கம் துவங்கியது மட்டுமல்லாமல், அதனை வைத்தே அரசியல் செய்தும் வந்துள்ளது. இந்த 3 முக்கிய கருத்துக்கள்தான் திமுகவின் அரசியல் அச்சாணி.

இந்த நிலையில் தற்பொழுது திமுகவில் முதல்வர் ஸ்டாலின் மகன் என்ற காரணத்தினால் உதயநிதி முன்னிறுத்தப்படுகிறார், மேலும் திமுக தனது அச்சாணியாக கருதி அரசியல் செய்யவேண்டிய கடவுள் மறுப்பு, தமிழ், மாநில அந்தஸ்து போன்ற விஷயங்களில் இருந்து விலகியது மட்டுமல்லாமல், மூத்த தலைவர்களையும் வாரிசு அரசியலை பேசவைத்ததால் இது நம்ம திமுக இல்லையே என திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்த அடிமட்ட தொண்டனை யோசிக்க வைத்துள்ளது!

போதாக்குறைக்கு இதே நிலை நீடித்தால் இனிவரும் காலங்களில் திமுக என்ற இயக்கமே ஆட்டம் காணும் எனவும், மக்களிடம் எதனை சொல்லி ஒட்டு கேட்டு செல்ல முடியும் எனவும் திமுகவின் உண்மையான நலம் விரும்பிகளை யோசிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் தான் கனிமொழி பிறந்தநாள் போஸ்டர் சிலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது மட்டுமல்லாது,யோசிக்கவும் செய்துள்ளது. தமிழத்தில் திமுகவை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும், பெருவாரியான வாக்கு சதவிகிதமாகிய பெண்கள் வாக்குகளை கவர ஏன் கனிமொழி அவர்களை திமுக'வின் முகமாக மக்களிடையே கொண்டு செல்லக்கூடாது என யோசிக்க வைத்துள்ளது.

குடும்ப ஆதிக்கம், வாரிசு அரசியல் போன்ற திமுகவின் சில எதிர்க்கட்சிகளின் விமர்சன தாக்குதல்களுக்கு கனிமொழியை தலைமை பொறுப்பில் கொண்டு கொண்டு வந்தால் சமாளிக்கலாம் எனவும் அங்கங்கே சில குரல்கள் கேட்கின்றன.

பார்க்கலாம் திமுகவின் அரசியல் எதிர்காலம் கனிமொழி கையிலா அல்லது யார் கையில் என?

Similar News