அடுத்தடுத்து நடக்கும் சர்ச்சைகள்... அமைச்சரவை மாற்றத்தை கையில் எடுப்பாரா மு.க.ஸ்டாலின்!
எட்டு நாள் ஆகியும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு முடியாமல் தொடர்ந்து வருவது திமுகவில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என பல கோடி ரூபாய் மோசடி செய்தது, இந்த ஆட்சி காலத்தில் மின் துறை மற்றும் ஆயத்துறை தீர்வு அமைச்சராக இருந்து கொண்டு டாஸ்மாக்குகளின் 10 ரூபாய் பாட்டிலுக்கு அதிகமாக வாங்கியது, சட்டவிரோதமாக பார்களை நடத்தியது, கரூர் கம்பெனி என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களின் மிரட்டி பணம் பறித்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் செந்தில் பாலாஜியை சுற்றியே நகர்ந்துள்ளது.
மேலும் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக அமைச்சரவையில் இருந்தபோது செய்த சட்டவிரோத நடவடிக்கைகளும், தற்பொழுது திமுகவில் மாறி அமைச்சரான பிறகு செந்தில் பாலாஜி செய்த பண பரிமாற்றங்களும் வருமானவரி துறையினர் கழுகு போல் கண்கானித்துவந்ததன் காரணமாக கடந்த வாரம் வருமானவரித்துறையினர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமான 40 இடங்களில் ரெய்டு நடத்த ஆரம்பித்தனர். முதல்வர் ஊரில் இல்லாத நேரத்தில் இந்த ரெய்டு துவங்கியதால் திமுகவினர் அதிர்ந்தனர். குறிப்பாக செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஏதாவது செய்ய வேண்டுமே என முனைப்பு காட்டி ரெய்டுக்கு வந்த வருமானவரித் துறையினர் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து மத்திய அரசு தலையிட்டு பாதுகாப்பிற்காக சிஐஎஸ்எப் படைகளை அனுப்பி வைத்தது 40 இடங்களில் ஆரம்பித்த ரெய்டு பின்னாளில் அதிகரித்து அதிகரித்து 200 இடங்களாக சென்றது.
இந்த நிலையில் திமுகவின் அமைப்பு செயலர் ஆர். எஸ். பாரதி இது அரசியல் காழ்புணர்ச்சியால் நடத்தப்படும் ரெய்டு என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதுதான் அரசியல் விமர்சகர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும், சந்தேகத்தை வரவழைத்தது. அதாவது கடந்த மாதத்தில் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு வந்த போது அதிகாரப்பூர்வமாக திமுகவிலிருந்து எதுவும் பேசப்படவில்லை. தனித்தனியாக தான் திமுகவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன, ஆனால் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி இது குறித்து எதுவும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி பேசவில்லை.