கோயில் சார்பில் மதசார்பற்ற கல்லூரியா ?

Update: 2021-11-22 13:14 GMT

'தமிழகத்தில் உள்ள பல சரித்திர புகழ்பெற்ற கோயில்களின் சொத்துக்கள் இன்று ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. இன்னும் பல கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. எஞ்சி இருக்கும் கோயில்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு அறங்காவலர் கூட நியமிக்கப்படவில்லை. இதையெல்லாம் அரசாங்கம் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'

– இப்படி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு இந்து இயக்கங்கள் கரடியாக கத்தி வருகின்றன.

ஆனால் இந்து இயக்கங்கள் வலியுருத்திய எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு முறையாக செயல்படுத்தியது போல தெரியவில்லை. இந்நிலையில் திடீரென்று சட்டமன்றத்தில் அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது, பலரது புருவத்தையும் ஆச்சரியத்தில் உயர்த்தியது. ஆனால் ஆலய வழிபடுவோர் சங்கத்தைப்போல விவரம் தெரிந்த சில இந்து அமைப்புகள் 'இது கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கவும், சொந்த அரசியல் லாபத்திற்காகவும்' அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதை பொட்டில் அடித்தாற்ப்போல் கூறியது.




அதோடு நிற்காமல் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் திரு.டி.ஆர்.ரமேஷ், அரசு முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், 'அறநிலையத்துறை புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கு தடைவிதித்ததோடு, ஏற்கனவே தொடங்கப்பட்ட கல்லூரிகளில் இந்து மத பாடத்தையும் இணைக்க உத்தரவு வெளியானது.

அறநிலையத்துறை சார்பில் கல்லூரி தொடங்கப்போவதாக வெளியான அறிவிப்பிற்குப் பின்னால் இருக்கும் அரசியல் முடிச்சு என்ன? உயர் நீதிமன்றத் தீர்ப்பினால் கிடைத்திருக்கும் நன்மை என்ன? என்பதை விரிவாகத் தெரிந்துக்கொள்ல ஆலய வழிபடுவோர் சங்கத்தின் மாநிலத்துணைத் தலைவர் உமா ஆனந்தன் அவர்களிடம் பேசினோம். அவர் கூறும்போது, 'தமிழகத்தைப் பொருத்தவரை கோயில்கள் என்பது வெறும் வழிபாட்டுக்குறிய இடம் மட்டும் கிடையாது. மாறாக தமிழர் நாகரீகத்தின் அர்டெஸ் கோயி்ல்கள்தான். வெள்ளைக்கார ஆட்சியில் என்னதான் இந்துக்களை ஆரியர் – திராவிடர் என்று பிரித்தாலும், இன்றுவரை தமிழர்கள் தங்களது வேரை மறக்காமல் இந்துவாக இருப்பதற்கும் கோயில்கள்தான் காரணம்.

கோயில்கள் சிறப்பாக இருக்கும்வரை தமிழர்களையும், தமிழர்களுக்குச் சொந்தமான இந்து கலாச்சாரத்தையும் அழிக்கவே முடியாது என்பதை இந்து விரோத சக்திகள் தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் இந்துக்களுக்கு கோயில் மீதுள்ள உரிமையை பறித்து முதல் அடி கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோயில்களை அழிக்க பல விதங்களிலும் சூழ்ச்சிகள் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் 'கோயில் காசில் கல்லூரி தொடங்கப்போகிறோம்' என்ற அறிப்பு.

இதைப்பற்றி விரிவாகச் சொல்கிறேன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருச்செந்தேர் முருகன், பழனி முருகன், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சொந்தமான பணத்தில் தற்போது நான்கு கல்லூரிகளை அறநிலையத்துறை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. முதலில் கோயில் பணத்தில் கல்லூரி தொடங்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. சட்டப்பிரிவு 66 கோயில் நிதியை எந்தெந்த விதத்தில் பயன்படுத்தலாம் என்பது பற்றி வழிகாட்டுகிறது. அதில் ஒரு உட்பிரிவான 66 1ஜி, கல்லூரி போன்ற நிறுவனங்களை தொடங்குவதுப் பற்றி விளக்குகிறது. முதலில் கோயில் பணத்தில் கல்லூரி கட்ட முடிவெடுக்கும் அதிகாரம் அந்த கோயிலின் அறங்காவலருக்கு மட்டுமே உண்டு.

கோயிலின் அறங்காவலர் கோயில் பணத்தில் கல்லூரி கட்ட முடிவெடுத்தால் முதலில் அதை அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பவேண்டும். அவர் அறங்காவலரின் திட்டத்தைப் பற்றி பிரபல பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கவேண்டும். அதன் பிறகே மேற்கொண்டு செயல்பட முடியும். அறங்காவலரைத் தவிர, இதுப்போன்ற முடிவுகளை எடுக்க அரசாங்கத்திற்கோ, தக்கருக்கோ அல்லது அறநிலையத்துறைக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. அப்படி இருக்கும்போது, அறநிலையத்துறை கோயில் பணத்தை எடுத்து கல்லூரி தொடங்கியதே சட்டப்படி தவறு!

அடுத்ததாக ஒரு கோயிலுக்கு அறங்காவலர் இருந்தாலும் கூட, ஆன்மீகப் பணிகள் அல்லாத கல்லூரி போன்ற நிறுவனங்களைத் தொடங்க கோயில் உபரி நிதியைத்தான் பயன்படுத்த வேண்டும். இன்று சகல வசதிகளுடன் கூடிய ஒரு கல்லூரியைக் கட்டுவதற்கு சராசரியாக 15 கோடி தேவைப்படுகிறது. கபாலீஸ்வரர் கோயில் சொத்துக்கள் மூலம் பெறப்பட்ட வட்டித்தொகை 8 கோடிதான்! மொத்த பணமும் கல்லூரிக்கு செலவழிந்துவிட்டால் கோயிலை யார் பராமரிப்பது? சொல்லப்போனால் அந்த கோயில் வருமானத்தில் கல்லூரி கட்டவே முடியாது.

இன்னொறு முக்கியமான பாயிண்ட் ஒன்று உள்ளது. அது கல்லூரி கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலம். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பணத்தில் சம்மந்தமே இல்லாமல் பரமத்திவேலூரிலும், பழனி கோயில் பணத்தில் தெப்பம்பட்டியிலும், கபாலி கோயில் பனத்தில் கொளத்தூரிலும், திருச்செந்தூர் கோயில் பணத்தில் விளாத்திக்குளத்திலும் கல்லூரி கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே பார்த்த அனைத்து கோயில்களுக்கும் அந்தந்த ஊரிலேயே தேவைக்கேற்ப சொத்துக்கள் இருக்கும்போது எதற்காக சம்மந்தமே இல்லாமல் பல கிமீ தொலைவில் உள்ள இடத்தில் கோயில் கட்டவேண்டும்?

உதாரணத்திற்கு கபாலி கோயிலுக்கு கிரின்வேஸ் சாலையில் கோடிக்கணக்கு மதிப்பிலான இடம் உள்ளது. அதைவிடுத்து எதற்காக கொளத்தூரில் கட்டவேண்டும்? திருச்செர்ந்தூர் முருகன் கோயில் பணத்தில் எதற்காக 90 கிமீ தள்ளியிருக்கும் விளாத்திகுளத்தில் கல்லூரி கட்டவேண்டும்? கோயில் காசை பயன்படுத்தி அதில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி எம்.பி.கனிமொழி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவே இதை பார்க்க முடியும்.

சரி… தேர்ந்தெடுத்த இடமாவது ஒழுங்காக உள்ளதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. திருச்செங்கோடு கோயில் பணத்தில், ஆல்ஃபா இன்ஸ்டிட்யூட் மேனேஜ்மெண்ட் என்ற இடத்தில் தற்காலிகமாக ஷெட் போட்டு கல்லூரி நடத்துகிறார்களாம். பழனி கோயில் பணத்தில் தெப்பம்பட்டி என்ற ஊரில் வாடகைக்கு இடம் எடுத்துள்ளார்கள். அந்த இடத்தை கல்லூரிக்கு பயன்படுத்திக்கொள்ள முதல் 18 மாதங்கள் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார் அந்த இடத்தின் உரிமையாளர். அப்படியென்றால் 18 மாதத்திற்கு பின்பு அவர் ஆட்சேபனை தெரிவித்தால் என்ன செய்வது?

விளாத்திக்குளத்தில் கல்லூரி தொடங்கப்படும் இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான கல்யாண மண்டபம். ஒரு கல்யாண மண்டபத்தில் கல்லூரி நடத்துவதற்கு எப்படி வசதி இருக்கும்? அதுவும் அது இன்னொறு கோயிலுக்குச் சொந்தமான மண்டபம். சரி… அங்கு கல்லூரி தொடங்கினால் கல்யாண மண்டபம் எங்கே செயல்படும் என்று கேட்டால், அதற்கு அறநிலையத்துறை சொல்லும் பதில் என்ன தெரியுமா? அறநிலையத்துறைக்குச் சொந்தமான வேறு இடத்தில் 19 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு செயல்படும் என்கிறது. இதில் காமெடி என்னவென்றால் அது அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலம் கிடையாது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம். கபாலி கோயில் பணத்தில் கொளத்தூரில் கல்லூரி செயல்படப்போகும் இடம் 'எவர் வின்' பள்ளி வளாகம். இந்த இடம் உண்மையில் கொளத்தூர் சோமனாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமானது. ஆனால் அரசாணையில் இது எவர் வின் பள்ளிக்கு சொந்தமான இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது நம் கண்முன்னாலேயே கோயில் நிலத்தை, ஒரு பள்ளியின் நிலம் என்று அரசாங்கம் சொல்லும்போது நாளை இந்த கல்லூரிகளின் உரிமை எப்படி போகும் என்று யாருக்குத் தெரியும்?

ஆக, கல்லூரி தொடங்கும் முடிவே சட்டவிரோதமானது, அது கோயிலின் நிதிச் சுமையை அதிகரிக்கும் விதத்தில் உள்ளது, மேலும் கோயில் இருக்கும் ஊருக்குச் சம்மந்தமே இல்லாத வேறு ஊரில் கல்லூரி தொடங்கப்படுகிறது, கோயில் நிலங்களை தனியார் மற்றும் அரசு நிலங்கள் என்று அரசாங்கமே அறிவிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, கோயில்களை அழித்து, அதன் சொத்துக்களை கபளீகரம் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறதோ? என்று தோன்றுகிறது.

கடைசி மற்றும் மிக முக்கியமான விஷயம். கோயில் பணத்தில் கல்லூரி தொடங்கப்பட்டால், அந்தக் கல்லூரியில் இந்து மதப்பாடம் கட்டாயமான சொல்லித்தரப்படவேண்டும். இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்படவேண்டும், இந்து மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது விதி! ஆனால் அதைச் செய்வார்களா என்பதற்கு உத்திரவாதம் இல்லை.

இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில்தான் அலய வழிபடுவோர் சங்கத்தினர் அரசின் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் விசாரணை முடிவில் 'அறநிலையத்துறை கோயில் பணத்தில் இனி புதிதாக எந்தக் கல்லூரியும் கட்டக்கூடாது. ஏற்கனவே கட்டப்பட்ட கல்லூரியில் இந்து மதப்பாடம் கட்டாயமாக கற்பிக்கப்படவேண்டும். அதுவும் ஒரு மாதத்திற்குள் செயல்படுத்தப்படவேண்டும்' என்று என்று நல்ல முறையில் தீர்ப்பளித்துள்ளது.

ஆக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அறநிலையத்துறையின் சட்டவிரோதப்போக்கை தடுக்கும் வகையில் அமைந்திருப்பதோடு, இந்துக்களுக்கான நீதியையும் வழங்கியிருக்கிறது.

இன்னொறு நல்ல விஷயமும் உள்ளது. கோயில் நிலம், கோயில் சொத்துக்கள் அபகரிப்பு நடந்தால் அது சம்மந்தாக காவல்துறையில் அறநிலையத்துறை ஆணையர்தான் புகார் கொடுக்க முடியும் என்று இருந்தது. தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு வரவேற்கத்தக்க வகையில் சட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர். அதன்படி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ஆலய நிலம், சொத்துக்களை அபகரித்தவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்க அனுமதி கிடைத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விஷயம். இந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு வீதிக்கு வீதி ஒரு டி.ஆர்.ரமேஷ் மற்றும் உமா ஆனந்தன் வரவேண்டும். ஆலய நிர்வாகம் சீராகும்வரை ஓயக்கூடாது' என்று முடித்தார்.

கோயில்கள் மீதான அதிகாரம் முழுக்க இந்துக்கள் வசம் வரும் நாளே, இந்துக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்த நாளாக அமையும்.

Tags:    

Similar News