உலகை உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல் - 15 ஆம் ஆண்டு நினைவு நாள்

உலகையே உலுக்கிய மும்பை மக்களையே பதைபதைக்க செய்த பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது . அதைப் பற்றிய தொகுப்பை காண்போம்.

Update: 2023-11-26 14:07 GMT

மும்பை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்தையும் பூமியில் உள்ள மற்ற நாடுகளையும் உலுக்கிய நாள் அது. பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் மும்பையில் புகுந்து நடத்திய மிருகத்தனமான தாக்குதலை அவ்வளவு சுலபமாக எப்படி மறந்துவிட முடியும் ?.கனத்த இதயத்துடன் அந்த நினைவுகளை பார்ப்போம். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 10 பேர் ஏகே 47 துப்பாக்கிகள் கையெறி குண்டுகள் ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கடல் வழியாக மும்பைகள் ஊடுருவினர்.


அவர்கள் குழுக்களாக பிரிந்து மும்பை ரயில் நிலையம், காமா ஆஸ்பத்திரி, ஓபராய் ஹோட்டல் , சினிமா உள்ளிட்ட இடங்களில் வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர். கண்ணில் படுகின்ற மக்களை எல்லாம் குருவிகளைப் போல சுட்டு தள்ளினர். சி எஸ்.எம் ..டி ரயில் நிலையத்தில் மட்டும் பயங்கரவாதிகள் அஜ்மல் இஸ்மாயில், கானால் ஆகியோர்  58 அப்பாவிகளை சுட்டுக் கொன்றனர் .மேலும் 14 பேரை படுகாயம் அடைய செய்தனர் .


இந்த தாக்குதல் அதிரடி சினிமாவை போன்று சில மணி நேரங்களில் முடிந்துவிடவில்லை. மூன்று நாட்கள் நீடித்தது. பயங்கரவாதிகள் மும்பை மக்களை பதைபதைக்க வைத்தனர். இருப்பினும் பாதுகாப்பு படையினரும் துணிச்சலோடு சண்டையிட்டு பயங்கரவாதிகளின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஈவிரக்கமே இல்லாத ஒன்பது கொடூர மிருகங்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் .


பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை மட்டும் உயிருடன் பிடித்தனர். இந்த தாக்குதல் முடிந்த பிறகு பிணக்குவியல்களை எண்ணிப் பார்த்தபோது போலீஸ் அதிகாரிகள், வெளிநாட்டினர், குழந்தைகள், பெண்கள் பொதுமக்கள் என 126 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது தெரியவந்தது.  பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012 ஆம் ஆண்டில் புனே ஏறவாடா ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான்.


இதன் பின்னரே நாட்டு மக்களின் கோபம் சற்று தணிந்தது. இருப்பினும் இதன் பின்னணியில் உள்ள அனைத்து விஷமிகளுக்கும் சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது மக்களின் மனதில் ஏக்கமானது.ஆறாத காயத்தையும் நீங்காத சோகத்தையும் ஏற்படுத்திய இந்த பயங்கரம் நடந்து இன்றுடன் 15 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உலகில் வேறு எங்கும் இது போன்ற ஒரு தாக்குதல் நடைபெற கூடாது என்பதே மும்பை மாநகர மக்களின் வேண்டுதலாக உள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News