கடல் அடி கனிம வளத்துக்கு இந்தியா குறி? பதறும் சீனா - இனி சந்திராயன் அடுத்து சமுத்ராயன்!
நிலவில் சாதனை படைத்த இந்தியா அடுத்து ஆழ் கடல் ஆய்விலும் இறங்கி உள்ளது. இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஆழ்கடல் இயக்கத்தின் கீழ், ஆழ்கடல் ஆய்வுக்காக மனிதர்களால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு சமுத்ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் எதிர்வரும் 2026ம் ஆண்டில் நிறைவுபெறும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதன் பின்னணி என்ன? இதன் மூலம் இந்தியாவுக்கு என்ன நன்மைகள் கிடைக்க போகிறது என்பதை பார்க்கலாம்.
இந்திய கடல் வளம்
இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் 7516 கி.மீ ஆகும். இதில் 13 பெரிய துறைமுகங்களும், 187 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் கொண்டு அமைந்துள்ளது. இத்துறைமுகங்களின் வழியாக 95 சதவீத வெளிநாட்டு வணிகம் நடைபெறுகிறது. வெறும் வணிகத்தோடு நின்று விடாமல் கடல் அடியில் உள்ள வளங்களை முறையாக பயன்படுத்த இந்தியா நினைக்கிறது.
சமுத்ராயன் திட்டம் மூலம் கடலின் அடியில் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உள்ள பாலிமெட்டாலிக் கனிம வளங்களைக் கண்டறியவும், அது குறித்து ஆராயவும் நீர் மூழ்கி கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலிமெட்டாலிக் கனிமத்தில் இரும்பு மற்றும் மாங்கனீஸ் ஆக்ûஸடுகள் அதிகமாகக் காணப்படுகிறது. கடலின் ஆழத்தில் காணப்படும் பல்லுயிர்களைப் பற்றி தெரிந்துகொள்வதிலும், ஆராய்வதிலும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே இந்த கப்பல் வசதி உள்ளது. இந்திய கடல் பகுதியில் மொத்தம் 380 மில்லியன் மெட்ரிக் டன் கனிம வளங்கள் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
கடலில் இருந்து பெறப்பட்ட கனிமங்கள்
கடலில் உலோக படிவுகள் இருப்பது முதன்முறையாக 1965 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தன. இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் அட்லாண்டிஸ் கடல் வடிவப் படுகையில் உலோகப் படிவுகள் காணப்படுகின்றன. 1000-3000மீ ஆழத்தில் குளிர்ந்த கடல்நீருடன் சூடான நீரூற்று திரவங்களின் கலவையால் கடலுக்கு அடியில் சல்பைடுகள் உருவாகின்றன. ஃபெரோமாங்கனீசு மேலோடு கோபால்ட், நிக்கல், பிளாட்டினம், டைட்டானியம், மாங்கனீசு மற்றும் இரும்பு படிவுகளும் கடலில் கிடைக்கிறது. கடலில் 400-4000 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றன. இவற்றை கண்டறிவது மூலம் பெரிய அளவில் பொருளாதார நன்மை ஒரு நாட்டுக்கு கிடைக்கும்.