ஒரு சாம்ராஜ்ஜியத்தையே சரித்த தி.மு.க: தென்னை நார் தொழில் முடங்கிப்போனதன் பின்னணி - ஓர் அலசல்!
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. உலக தென்னை நார் உற்பத்தியில், 60 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில், 23 ஆயிரம் தென்னை நார் சார்ந்த தொழிற்சாலைகள் உள்ளன. தமிழகத்தில் 1960ம் ஆண்டுகளில் நார் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு, தற்போது, 7,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. தமிழகத்தில், 27 மாவட்டங்களில் இந்த தொழில் நடக்கிறது.
14 ஆயிரம் கோடி ரூபாய் வணிகம்
தென்னையில் இருந்து, 5,000 விதமான பொருட்கள் உற்பத்தி செய்யலாம். இந்தியாவில் இருந்து, 4,500 கோடி ரூபாய்க்கு தென்னை நார் பொருட்கள் 125 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தொழிலாக உள்ளது.உள்நாட்டு தேவைக்காக ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் செய்யப்படுகிறது.இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 14 மாநிலங்களில் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.முக்கியமாக கிராமப்புற பெண்கள் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பாக உள்ளது.
மண்ணில்லா விவசாயத்துக்கு மூலதனம்
கோகோபித் எனப்படும் தென்னைநார் துகள் இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு, ஒன்பது லட்சம் மெட்ரிக் டன் தென்னை நாரும், 14 லட்சம் மெட்ரிக் டன் கோகோபித்தும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மண்ணில்லா விவசாயத்துக்கு, கோகோபித் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் கோகோபித் மண்ணில்லா விவசாயத்துக்கு கைகொடுக்கிறது. கோகோபித் நீரை தன்னுள் சேமித்து வைத்து, தாவரத்துக்கு வழங்குகிறது. இயற்கைக்கு பாதிப்பு இல்லாதது. இதனால், மாடி தோட்டம், வீட்டு தோட்டம் அமைப்பதற்கு, மண்ணுக்கு பதிலாக கோகோபித் உதவுகிறது. அரசும் இதை ஊக்குவிக்கிறது. முன்பெல்லாம் ரோட்டில் கொட்டப்பட்டு வந்த கழிவுகள் தற்போது, கோகோபித் ஆக மாற்றப்படும் தொழிலாக உருவெடுத்துள்ளது.