மத்திய அரசின் அடுத்த மாஸ்டர் ஸ்ட்ரோக்: முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்!
நாடு முழுவதும் அனைவருக்குமான உயா் தரமான கல்வியை வழங்க பி.எம் ஸ்ரீ பள்ளிகள் எனப்படும் முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் திட்டம் ரூ27,360 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய திட்டம் தற்போது மத்திய, மாநில அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில், தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளை வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 14500க்கும் அதிகமான பள்ளிகள் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மேம்படுத்தப்படும். பிஎம் ஸ்ரீ பள்ளிகள், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அனைத்து அம்சங்களையும் கொண்டதாகவும் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகவும் விளங்கும். இந்தப் பள்ளிகள் தரமான பயிற்றுவித்தல் மூலம் மாணவர்களை மேம்படுத்துவதோடு, 21-ம் நூற்றாண்டுக்கான திறன்களுடன் ஒவ்வொரு மாணவரையும் முழுமையான அனைத்து திறன் கொண்டவராக உருவாக்கப் பாடுபடும்.
குஜராத்தில் உள்ள காந்திநகரில் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த ஒரு மாநாட்டின் போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்களுடன் இந்த திட்டம் முதலில் விவாதிக்கப்பட்டது. மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இம்முயற்சி முன்னெடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அப்போது தெரிவித்திருந்தார். நவோதயா வித்யாலயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் போன்ற முன்மாதிரியான பள்ளிகள் இருக்கும்போது, பி.எம். ஸ்ரீ தேசிய கல்விக் கொள்கை ஆய்வகங்களாக செயல்படும் என்று அவர் கூறினார்.
பி.எம். ஸ்ரீ பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலிருந்து எவ்வாறு வேறுபடும்?
கேந்திரிய வித்யாலயாக்கள் அல்லது ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் முற்றிலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. மத்தியத் துறைத் திட்டங்களின் கீழ் அவை மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கற்பித்தலை கேந்திரிய வித்யாலயாக்கள் பெரிதும் பூர்த்தி செய்யும். அதே வேளையில், நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள திறமையான மாணவர்களை வளர்ப்பதற்காக ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் அமைக்கப்பட்டன. இதற்கு மாறாக, பி.எம் ஸ்ரீ பள்ளிகள், தற்போதுள்ள மத்திய, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளை மேம்படுத்தும். இதன் அடிப்படையில் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், மாநில அரசு பள்ளிகள் அல்லது முனிசிபல் கார்ப்பரேஷன்களால் நடத்தப்படும் பள்ளிகளாக இருக்கலாம்.