இவர் இருந்த வரையில் திராவிட இயக்கம் இருந்த இடம் தெரியல: வரலாறு பேசும் தேவரின் பின்னணி!
முத்துராமலிங்கத் தேவர் ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் ஆங்கில அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். இவர் இருந்த காலம் வரையில் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வளரவில்லை. தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர் என்பதை முழக்கமாக கொண்டு செயல்பட்டவர்.
ஆரம்ப வாழ்க்கை
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற ஊரில் வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார். அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்தக் குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ல் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராகத் தேவர் அவர்கள் முதன்முதலாகப் போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்புதான் இந்தப் போராட்டம் உச்சகட்டம் எட்டியது.
அரசியல் பிரவேசம்
1936ல் வாரிய தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்குப் பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார். 1937ல் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியைக் கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு, பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர், அந்தத் தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார்.