கண்ணை கசக்க தேவையில்லை - பெண்களின் வரலாற்றை மாற்றி எழுதிய பிரதமரின் திட்டம்!
உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, உலகளவில் சுமார் 240 கோடி மக்கள் மண்ணெண்ணெய், பயோமாஸ் மற்றும் விறகுகளை பயன்படுத்தும் அடுப்புகளை சமையலுக்கு நம்பியுள்ளனர். இது காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. மாசு இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் சமையல் மூலமான காற்று மாசுபாடு பிரச்சினையை நிவர்த்தி செய்யவும் பிரதமரின் உஜ்வாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2016 மே 1ல் தொடங்கப்பட்டது
கடந்த காலங்களில், இந்தியாவில் உள்ள ஏழை மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், விறகு, நிலக்கரி மற்றும் சாணம் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தினர். இதனால், அவர்கள் சுகாதார பிரச்னைகளையும் எதிர்கொண்டனர். இந்நிலையில், பிரதமரின் உஜ்வாலாத் திட்டம் பெண்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுவூட்டியுள்ளது. மேலும், உஜ்வாலா திட்டம் பெண்களின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஏனெனில் அவர்கள் விறகு அல்லது எரிபொருளை சேகரிக்க பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
எல்பிஜி பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான முன்முயற்சிகள்
பஹல் திட்டத்தின் மூலம் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவதற்கு பதிலாக, அவை சந்தை விலையில் விற்கப்பட்டன. அதற்கான மானியம் நேரடியாக மின்னணு முறையில் தனிநபரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது. இதன்மூலம், தேவையற்ற கணக்குகள் குறைந்ததுடன், வணிக நோக்கங்களுக்காக வீட்டு சிலிண்டர்களை பயன்படுத்துவதும் தடுக்கப்படுகிறது. மானியங்களை வலுக்கட்டாயமாக நீக்குவதற்குப் பதிலாக, மக்கள் தாமாக முன்வந்து தங்கள் மானியங்களை ஒப்படைக்க ஊக்குவிக்கப்பட்டனர். விரிவான விளம்பரத்தின் மூலம், மில்லியன் கணக்கான மக்கள் மானியங்களை மனமுவந்து விட்டுக்கொடுத்தனர். இது எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுவதில் உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு நிதியை திருப்பிவிட உதவியது. 2020ல் கொரோனா லாக்டவுன் போது, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் இலவச ரீஃபில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 14.17 கோடி சமையல் எரிவாயு நிரப்புதலுக்காக பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்ட பயனாளிகளுக்கு ரூ.9670.41 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.