ஞானவாபி மசூதி கோவிலை இடித்து கட்டப்பட்டதா? பரபரப்பு அறிக்கை.. இந்திய தொல்லியல் துறை கூறியது என்ன..
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி வளாகத்தின் ஆய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறை நேற்று சமர்பித்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஞானவாபி மசூதி கோவிலை இழுத்து கட்டப்பட்டதா? அதன் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன? உண்மையில் என்னதான் நடந்து இருக்கும்? வரலாற்றில் உண்மைகள் மறைக்கப்பட்டனவா? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கடந்த காலங்களில் எழுந்து இருக்கிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய தொல்லியல் துறை தன்னுடைய இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து இருக்கிறது. இதை தொல்பொருள் ஆய்வுத் துறையின் நிலை வழக்கறிஞர் அமித் ஸ்ரீவஸ்தவா, சீல் வைக்கப்பட்ட அறிக்கையை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
கிட்டத்தட்ட சுமார் 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அயோத்தியை போன்றே ஞானவாபி மசூதி வழக்கு, மதுரா மசூதி வழக்கு தொடர் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
குறிப்பாக வரலாற்று பின்னணியில் கூறும் பொழுது, 17 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் கீழ் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த இடத்தில் ஒரு கோயில் இருந்ததாக ஆர்வலர்களின் குற்றச் சாட்டுகள் தெரிவிக்கின்றன.இந்த மசூதி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.