மோசமான நிலையில் அரசு பேருந்துகள்.. கடும் நஷ்டத்தை சந்திக்கிறதா போக்குவரத்துக் கழகம்..
மிக மோசமான சூழலில் தள்ளாடும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்:
தமிழகத்தில் தற்போது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தி வருகின்றன.பல்வேறு சிறப்பு திட்டங்களில் இலவமாக மக்கள் பயணிக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. தற்போது போக்குவரத்து கழகங்கள் மிக மோசமான சூழலில் தள்ளாடி கொண்டிருக்கிறது.
நீண்ட நாட்களாக இயக்கப்படும் பழைய பேருந்துகள்:
இதற்குக் காரணம் தற்போது பல்வேறு பழைய பேருந்துகளை பழுது பார்க்காமலும், புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என்று பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. பயன்பாட்டில் உள்ள பல பேருந்துகளில் மேற்கூரை உடைந்து தொங்குவது, ஓட்டை விழுந்து மழைநீர் ஒழுகுவது மிகவும் வாடிக்கையாக உள்ளது. பேருந்துகளில் சீட் கிழிந்து பயணிகள் அமர்ந்து பயணிக்க முடியாத நிலை உள்ளது. பழுதான படிக்கட்டுகள் திடீரென்று கழன்று விழுகின்றன. பழைய பேருந்துகளே நீண்ட நாட்களாக இயக்கப் படுகின்றன. புதிய பேருந்து வாங்க போக்குவரத்து கழகங்களிடம் எவ்வித நிதி ஆதாரங்களும் இல்லாத நிலை உள்ளது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு:
சமீபத்தில் கூட தி.மு.க அரசு புதிய பேருந்துகளை வாங்கவில்லை என்றும், பழைய பேருந்துகளை சரி செய்யவில்லை என்றும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினார். 5,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை வாங்குவதற்கான திட்டத்தை மட்டும் அறிவித்து இருந்தது தி.மு.க. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யவே மக்கள் அஞ்சுகின்றனர். மேலும், டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் திமுக அரசு அக்கறை கொண்டுள்ளது என்றும், தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும், அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் பழனிசாமி கூறினார்.