விரைவில் தமிழகத்தில் மோடி அரசின் டிஜியாத்ரா திட்டம்: இனி விமானத்தில் பயணிப்பது மிகவும் சுலபம்..
மத்திய அரசின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்ட டிஜியாத்ரா திட்டம்:
முகத்தை காட்டி விமானத்தில் பறக்கும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. விமான பயணத்திற்கு முன்பாக, பயணிகள் பல இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக, "முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பத்தை" மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அடிக்கடி விமான பயணம் மேற்கொள்பவர்கள், இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த திட்டத்தை பயணிகள் பயன்படுத்துவதற்கான முகாம், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 2023-ல் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, நடிகர் நாகார்ஜுனா மற்றும் அவருடைய மகன் அகில் உள்பட 4 ஆயிரம் பேர் தாங்களாகவே முன்வந்து இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த முகாமில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விண்ணப்பத்தாரர்களின் அடையாள சான்றிதழ் மற்றும் விவரங்களை பரிசோதித்து பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் இந்த திட்டம் தற்போது தமிழகத்தில் அடுத்த மாதம் வர இருக்கிறது. சென்னை, கோவை விமான நிலையங்களில், இனி ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 'டிஜியாத்ரா' திட்டத்தின் கீழ், முக அடையாளத்தை காட்டி, பயணம் செய்யும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டிச் செல்ல, நேர விரயமாகிறது. அனைத்து சோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏற பெரிதும் சிரமப்பட வேண்டி உள்ளது. அதை தவிர்க்க, மத்திய அரசு, 'டிஜியாத்ரா' என்ற திட்டத்தை, 2022 டிசம்பர் 1-ல் அறிமுகம் செய்தது.
முதற்கட்ட 'டிஜியாத்ரா' திட்டம்:
அதன்படி, பயணம் செய்ய இருப்பவர்கள் தங்களின் ஸ்மார்ட் போன்களில், 'டிஜியாத்ரா' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், ஆதார் எண், பாஸ்போர்ட் எண், பயணத்திற்கான டிக்கெட் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு, விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் நாளன்று, இவற்றில் எதையுமே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாஸ்போர்ட்டை எடுத்து வர மறந்து விட்டேன் என்ற கவலை வேண்டாம். இந்த ஒரு திட்டம் போதும். முதற்கட்டமாக, 'டிஜியாத்ரா' திட்டம், மேற்கு வங்கம் - கோல்கட்டா, மஹாராஷ்டிரா - மும்பை, குஜராத் - ஆமதாபாத் உள்ளிட்ட, 14 விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம், எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்ய உதவியாக இருப்பதாக, விமான பயணியர் தெரிவித்து வருகின்றனர்.