திரிணாமூல் காங்கிரஸ் கட்சி.. இந்திய தேசியத்திற்கு எதிரான செயல்பாடு.. பிரதமர் மோடி கடும் தாக்கு..
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ் நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. CAA நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசால் கடந்த மாதம் அமல்படுத்தப் பட்டது. ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. இது மேற்கு வங்கத்தில் ஒருபோதும் செயல்படுத்தப்படாது என்று கூறியுள்ளது. அது மட்டும் கிடையாது மாநிலத்தில் அதை அமல்படுத்த நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஏற்கனவே திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அங்கு பேசும் போது, மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு இளைஞர்களின் உரிமைகளை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
திரிணாமூல் காங்கிரஸ் செய்துள்ள துரோகம்:
மாநிலத்தில் OBC பிரிவினருக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்துள்ள துரோகத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம் வெளிப் படுத்தியுள்ளது. ஒரு சாராரை திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் OBC இளைஞர்களின் உரிமைகளை அக்கட்சி பறித்துள்ளது. இந்த துரோகத்தை உயர்நீதிமன்றம் வெளிப்படுத்திய நிலையில், நீதித்துறை செயல்பாடுகள் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்புவது வியப்பை அளிக்கிறது. நீதித்துறை மீதும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் அக்கட்சிக்கு நம்பிக்கை இல்லையா?திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், நல்ல நிர்வாகத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே செயல்பட்டு வரும் அக்கட்சி, ஒருபோதும் மாநில இளைஞர்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் (CAA) திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது.
பிரதமர் மோடி தாக்கு:
ஆனால், இந்த சட்டத்தின் மூலம் இன்றைக்கு நூற்றுக்கணக்கான அகதிகள் இந்திய குடியுரிமையைப் பெற்று வருவதற்கு ஒட்டுமொத்த நாடும் சாட்சியாக உள்ளது. மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சியும் ஜனநாயகமற்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் ஜனநாயக நடைமுறைகளை அலட்சியப்படுத்துவதிலும் பெயர்பெற்றவர்கள் என்றார். குறிப்பாக அவர்கள் வங்காள தேச இஸ்லாமியர்களையும், மியான்மர் ரோஹீங்கா முஸ்லீம்களையும் மேற்கு வங்க மாநிலத்திற்குள் அனுமதித்து அவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொடுத்து அவர்களை மறைமுகமாக இந்தியர்களாக்கி, அவர்களை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முயல்வதாக பிரதமர் மோடி தாக்கி பேசினார்.