விமர்சியாக நடைபெற்ற பட்டினபிரவேஷம்.. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு.. இந்து விரோத செயலா?.
தருமபுரம் ஆதீனத்தின் பட்டினபிரவேஷ நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கக் கோரி, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் நேற்று முன்தினம் வரை கூட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தாலும் தற்பொழுது பட்டினபிரவேஷம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்து இருக்கிறது.
பழமையான தருமபுர ஆதீன மடம்:
மயிலாடுதுறையை அடுத்து இருக்கும் தருமபுரத்தில் பழமையான தருமபுர ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் குருபூஜை நடப்பது வழக்கம் தான். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குருபூஜை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. குருபூஜையின்போது மடத்தில் உள்ள ஸ்ரீஞானபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான பட்டினபிரவேஷ நிகழ்ச்சி நேற்றிரவு 10 மணிக்கு நடைபெற்றது.
எதிர்ப்புகளை மீறி விமர்சியாக நடைபெற்ற பட்டினபிரவேஷ நிகழ்ச்சி:
தருமபுர ஆதீன மடத்தில் 27ஆவது குரு மகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் 72 பக்தர்கள் தூக்கிச் சென்றனர். தங்க கொரடு, பாதரட்சை, ஆபரணங்கள் அணிந்து பல்லக்கில் அமர்ந்திருந்த தருமபுர ஆதீனத்திற்கு, பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் தீபாராதனை எடுத்து வழிபட்டனர். மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனகர்த்தர்கள் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட பரிவாரங்களுடன் விமர்சியாக வீதி உலா நடைபெற்றது. மேலும், கிராமிய கலைநிகழ்ச்சிகளால் விழா களைகட்டியது. தருமபுரம் ஆதீனத்தை சிவமாக எண்ணி, சுமந்ததாக பல்லக்கு தூக்கியவர்கள் தெரிவித்தனர்.
யார், யார் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்தார்கள்?
தருமபுர ஆதீன மடத்தில் கடும் எதிர்ப்பை மீறி பட்டினபிரவேஷம் நடைபெற்று முடிந்து இருக்கிறது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தார்கள். இருந்தாலும் கடும் எதிர்ப்புக்கு இடையே தருமபுர ஆதீனத்தின் பட்டினபிரவேஷம் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டணப்பிரவேச நிகழ்விற்கு வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் தருமபுர ஆதீன மடத்தில் 360 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பட்டினபிரவேஷ நிகழ்ச்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தி.மு.க ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் இத்தகைய போராட்டங்கள் மிகவும் வலுவாக தான் நடைபெற்று வருவதும் கவனிக்கத்தக்க வேண்டிய விசயம்.