முதல் வெற்றியை பதிவு செய்து கேரளாவில் வரலாற்றை மாற்றியமைத்த சுரேஷ்கோபி!

Update: 2024-06-05 12:36 GMT

திருச்சூரும் பாஜகவும்:

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் பல நட்சத்திரப் போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். மேலும் அவர்களில் பலர் வெற்றியும் அடைந்துள்ளனர். அதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு வெற்றியாக இருப்பது திருச்சூரில் பாஜக பெற்ற வெற்றி தான்! ஏனென்றால் திருச்சூர் தொகுதியில் குருவாயூர், மணலூர், ஒல்லூர், திருச்சூர், நட்டிகா, இரிஞ்சலக்குடா மற்றும் புத்து காடு என ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் எல்லாம் இதுவரை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே வெற்றியை பிடித்து வந்துள்ளனர், அவர்களுக்கே இப்பகுதியில் உள்ள மக்கள் அதிகமாக வாய்ப்பு கொடுத்து வந்தனர். மேலும் திருச்சூர் தொகுதியில் மொத்தம் உள்ள 13, 37,110 வாக்காளரின் வாக்குகளை வெறும் வேட்பாளரை மட்டும் காட்டி பெற முடியாது. வேட்பாளர்களின் அரசியல் பின்புலம், அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தையும் இப்பகுதி மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 

2024 லோக்சபா தேர்தல்: 

இப்படி தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்று வந்த திருச்சூர் பகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் கடந்த 2019 ஆம் மக்களவைத் தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 33 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் 50 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்தது மட்டுமின்றி கடந்த முறை 29.38 சதவிகிதமாக இருந்த வாக்கு விகிதத்தை, இந்த முறை 36.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது பாஜக. அந்த வரிசையில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் நட்சத்திர வேட்பாளர் சுரேஷ் கோபியின் வெற்றியானது மிக முக்கிய வெற்றியாகவும், தென்னிந்தியாவை குறிப்பாக கேரளாவில் பாஜகவின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு முதல் படியாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கேரள மக்களவைத் தொகுதியில் ஒரு தொகுதி கூட பாஜக வென்றதில்லை என்னும் வரலாற்றை மாற்றியமைத்தது பாஜக. 


யார் இந்த சுரேஷ் கோபி: 

ஆலப்புழாவில் பிறந்த சுரேஷ்கோபி விலங்கியல் துறையில் இளங்கலை அறிவியல் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். மேலும் இவர் சிறந்த மலையாள நடிகரும், பின்னணி பாடகரும் ஆவார். 250க்கும் மேற்பட்ட மலையாள சினிமாவில் நட்சத்திர நடிகராக வளம் வந்த சுரேஷ்கோபி, 2016 அக்டோபரில் பாஜகவில் சேர்ந்தார். பிறகு திருச்சூர் தொகுதியில் 2019 தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் பிரதாபனிடம் தோல்வியை தழுவினார். ஆனால் தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் திருச்சூர் தொகுதியிலேயே போட்டியிட்டு கேரளா மாநிலத்தில் பாஜகவின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். 

சுரேஷ்கோபியும் பாஜகவும்: 

கேரளாவில் பாஜகவுக்கு இடமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்து வந்த பொழுது கேரளாவில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த சுரேஷ்கோபி, 2019 இல் நடந்த தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்படி தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலே 8.2% ஓட்டுகள் பெற்று அவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து 2021 சட்ட சபை தேர்தலிலும் திருச்சூர் தொகுதியில் களமிறக்கப்பட்ட சுரேஷ்கோபி, 31.3 சதவீத ஓட்டுகள் பெற்று தோல்வியை தழுவினார். ஆனால் 2016 சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற ஓட்டு சதவீதத்தை விட சுரேஷ்கோபி 12 சதவீத ஓட்டுகளை அதிகம் பெற்றார். 

இதன் தொடர்ச்சியாக 2024 தேர்தலிலும் திருச்சூர் எனக்கு வேண்டும் என்று உரக்க குரலில் கூறி, தீவிரப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு 74 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் பாஜகவின் வளர்ச்சியானது கேரளாவில் இனிவரும் தேர்தல்களில் வேகம் எடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Tags:    

Similar News