இது குறித்து ஏற்கனவே அண்ணாமலை அவர்கள் எக்ஸ் வலைதளத்தில் அறிக்கை ஒன்றே வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது, "ஆட்சியில் இருக்கும்போது, ஊழல் செய்வதில் மட்டும் கவனமாக இருந்துவிட்டு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும், மாநில உரிமைகள் பற்றி பேசும் திமுகவின் நாடகத்தை, தமிழக மக்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றனர். நிதித் துறையில் அனுபவம் பெற்ற ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் சம்பாதித்ததை எளிதாக கண்டறிந்த, தமிழக முன்னாள் நிதி அமைச்சர் போன்றவர்களிடம், பொய் சொல்பவர்கள் ஆலோசனை கேட்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரி பகிர்வு, 32 சதவீதம், 2004 - 2014 காலகட்டத்தில் வழங்கப்பட்ட வரி பங்கீடு, 94,977 கோடி ரூபாய் மட்டுமே. அந்த காலத்தில் தமிழகத்திற்கு வழங்கிய உதவி தொகை, 57,924 கோடி ரூபாய். மத்திய பா.ஜ.க ஆட்சியில், மாநிலங்களுக்கு உயர்த்தப்பட்ட வரி பகிர்வு, 42 சதவீதம் ஆகும். கடந்த10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கிய வரி பங்கீடு, 2.77 லட்சம் கோடி ரூபாய். தமிழகத்திற்கு வழங்கிய உதவி தொகை, 2.30 லட்சம் கோடி ரூபாய்.
திமுக ஆட்சிக்கு வந்த பின், 6,412 கோடி ரூபாய் தமிழக உள்கட்டமைப்பை மேம்படுத்த, 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் உதவியாக, மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்திற்கான திட்டங்கள், உதவி தொகை நிதி பங்கீட்டின் மதிப்பு என்று 10.76 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நேரடி வரி பங்களிப்பான, 5.16 லட்சம் கோடி ரூபாயை விட, இரு மடங்கு அதிகம்" என கூறி இருக்கிறார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்:
தென் மாநிலங்கள் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மத்திய அரசால் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது விளக்கம் அளித்தார். "மாநிலங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரியை மத்திய அரசு திரும்பத் தரவில்லை என்று கூறுவதில் உண்மையில்லை. நிதி வழங்குவதில் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது என்று தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிர்மலா சீதாராமன் மறுத்து இருக்கிறார்.
நிதிக்குழு பரிந்துரையே பிரதானம்:
பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாட்டின் நலன்களில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும், இது தொடரும் என்றும் மத்திய அரசின் பணிகள் தொடரும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எந்த ஒரு நிதி குழுவும் தாங்களாகவே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்து முடிவு செய்வது கிடையாது. நிதி குழுவினர் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் செல்கின்றனர். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுதான் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. நிதி குழு என்ன பரிந்துரை வழங்குகிறதோ? அதைத்தான் நானும் அறிவிக்கிறேன், செயல்படுத்துகிறேன். அனைத்து நிதி அமைச்சர்களும் இதையே பின்பற்றுகின்றனர். நிதி ஒதுக்கீடு பற்றி நிதிக்குழுவின் அறிக்கை தான் இங்கு முக்கியமானது. நிதி ஒதுக்கீட்டில் எங்களுக்கு வேண்டிய மாநிலம், பிடிக்காத மாநிலம் என்ற பாகுபடு எதுவும் இல்லை" என்றார்.
நிதிக்குழு என்ன வேலையை செய்யும்?
மத்திய அரசிடம் உள்ள அதிக நிதி வருவாயிலிருந்து மாநில அரசுக்குத் தேவையான நிதிகளை வழங்க பரிந்துரை செய்வதுதான் நிதிக்குழு. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான நிதி ஏற்றத்தாழ்வு எல்லா கூட்டாட்சிகளிலும் இருக்கக்கூடிய ஒன்றாகும். மத்திய அரசுகளிடம் அதிகமான நிதி வருவாய்களும் மாநில அரசுகளிடம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்கான செலவுப் பொறுப்புகளும் இருக்கின்றன. மத்திய அரசின் வரி வருவாயில் எவ்வளவு தொகை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும்? என்பதை நடுநிலையாக தீர்மானிக்க வேண்டி நிதி குழு அமைக்கப்படும். இங்கு மத்திய அரசின் தலையீடு என்பது இருக்காது.
மாநிலங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நிதியினை மாநிலங்களுக்கும் பிரித்து கொடுப்பதும் சிக்கலான காரியம் தான். எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் அதிகாரங்களும், பொது செலவு செய்யும் கடமைகளும் பெற்றிருந்தாலும், மாநிலங்களுக்கிடையே உள்ள பொருளாதார வேறுபாடுகள் அவர்களின் நிதிச் சுமையை வேறு படுத்துகின்றன. மாநிலங்களுக்கிடையே உள்ள நிதி நிலை வேறுபாடுகளை கணக்கில் கொண்டு நிதி குழு மத்திய அரசின் நிதியை மாநிலங்களுக்கிடையே பிரித்துக் கொடுக்கும்.
ஆக, மத்திய அரசு வரி வருவாயில் எவ்வளவு மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும்? அவ்வாறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனைத்து மாநிலங்களுக்கு எவ்வாறு பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும்? என்பன பற்றிய பரிந்துரைகள் வழங்குவது நிதிக் குழுவின் முக்கிய கடமைகளாகும். அரசியலமைப்புச் சட்டதின் 280 பிரிவின் கீழ், நிதிக்குழு ஐந்து ஆண்டுக்கொருமுறை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும். தற்போது 15வது நிதி கமிஷனின் பரிந்துரைகள் அமலில் உள்ளன. இந்தப் பரிந்துரைகள், 2021லிருந்து 2026ஆம் ஆண்டுவரையில் அமலில் இருக்கும்.
இரு மாநிலங்களை ஒப்பிடவே கூடாது:
தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வரி அதிகம் கிடைக்கக்கூடிய கார் போன்ற பொருட்களை உற்பத்தி செய்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் விவசாயம் அதிகம் நடக்கிறது. விவசாய உற்பத்திக்கு வரி கிடையாது. ஆகவே இருவிதமான மாநிலங்களையும் ஒப்பிட முடியாது. தவிர, மாநிலங்களுக்கிடையே நிதிப் பகிர்வைச் செய்வது, நிதி ஆணையம் தான். மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. சொல்லப் போனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட கூடுதல் நிதிப் பகிர்வுதான் நடக்கிறது.
Input & Image courtesy:
1. BBC 2. The Hindu 3. Hindu Tamil
4. India News 5. The Hindu 6. One india
7. Polimer News