எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டல் விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காட்டும் திமுக...! திமுக ஆட்சி குறுநில மன்னர் ஆட்சியா?

Update: 2024-06-15 13:57 GMT

எஸ்ஆர்எம் குழுமம்:

திருச்சி காஜாமலை பகுதியில் 4.74 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கு சொந்தமான இடத்தில் 30 ஆண்டுகாலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்திற்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டல், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த நட்சத்திரம் ஹோட்டலுக்கான குத்தகை தொகை ஆரம்பத்தில் ஆண்டிற்கு 3.5 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியரால் சந்தை மதிப்பு அடிப்படையில் ஏழு சதவீதம் ஆண்டு குத்தகை தொகை உயர்த்தி நிர்ணயம் செய்யவும் ஒப்பந்தமானது. 

இந்த நிலையில் குத்தகை காலம் கடந்த ஜூன் 13ம் தேதியுடன் முடிந்ததால், குத்தகை காலம் நிறைவடைந்து விட்டதாக ஹோட்டல் நிர்வாகத்திற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சுற்றுலா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஹோட்டலை கையகப்படுத்துவதற்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது எஸ்ஆர்எம் குழும இயக்குனர் பார்த்தசாரதி மற்றும் வழக்கறிஞர் சேனா பிரசாத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்பொழுது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, நோட்டீசும் அளிக்காமல் உடனடியாக காலி செய்யச் சொல்வது சட்டப்படி தவறு என்று எஸ்ஆர்எம் குழுமம் தரப்பில் வாதிடப்பட்டது. 

திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி:

மேலும் இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எஸ்ஆர்எம் குழும இயக்குனர் பார்த்தசாரதி மற்றும் வழக்கறிஞர் சேனா பிரசாத், சுமார் 30 ஆண்டுகளாக இதே இடத்தில் ஹோட்டல் இயங்கி வருகிறது. குத்தகை காலம் 13.06.2024 அன்றுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் ஒப்புக்கொண்ட வாடகையை உடனடியாக செலுத்தி வருகிறோம். குத்தகை நீட்டிப்பு குறித்த சிவில் வழக்கையும் தாக்கல் செய்திருந்தோம், கடந்த ஜூன் 10ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கும் வந்தது. மேலும் குத்தகையை ரத்து செய்வதற்கு கட்டாய தடை விதிக்க கோரியும், எங்களை வெளியேற்ற வற்புறுத்தும் படி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என திருச்சி சப்கோர்ட்டில் மற்றொரு வழக்கை ஜூன் 5ஆம் தேதி தொடர்ந்துள்ளோம். இந்த இரண்டு வழக்கும் சட்டபூர்வ நடைமுறைகள் இருக்கும் பொழுது திடீரென சட்டவிரோதமாக ஹோட்டலை கையகப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். எங்கள் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தன் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டாதால் தான், முற்றிலும் அரசியல் பழி வாங்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர். 

குறுநில மன்னர்கள் போல் செயல்படும் திமுகவினர்:

அதே சமயத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில், அதன் நிர்வாகிகள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவது வாடிக்கையானது. காலங்காலமாக, நில ஆக்கிரமிப்புகளும், கட்டப்பஞ்சாயத்தும், அத்துமீறல்களும், திமுக ஆட்சியின் ஒரு அங்கமாகவே விளங்கி வருகின்றன. ஆட்சி அதிகாரத் திமிரில், அரசியல் காரணங்களுக்காக மற்றவர்களைப் பழிவாங்குவது திமுகவுக்கு வழக்கமானது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக, கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக, மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மண்டபத்தை இடித்துப் பழி தீர்த்துக் கொண்ட திமுக, இன்றும் திருந்தவில்லை என்பதே தற்போது திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலைக் கைப்பற்ற நடக்கும் முயற்சி நிரூபிக்கிறது. கடந்த 2006, 2011 ஆட்சிக் காலத்தில், இது போன்ற அராஜகச் செயல்பாடுகளால்தான், திமுகவை மக்கள் 10 ஆண்டுகள் தூக்கி எறிந்தார்கள் என்பது சிறிதேனும் நினைவில் இருக்குமேயானால், பொதுமக்களின் வாக்குகள் மீது பயம் இருக்குமேயானால், மீண்டும் அதே போன்ற அநியாயமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். 

ஆனால், மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் மூன்று ஆண்டு கால இருண்ட ஆட்சியால், மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்பது நன்கு தெரிந்ததால், முடிந்த வரை குடும்பத்துக்காகச் சுருட்டுவோம் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்படும் திமுக, திருந்த வாய்ப்பே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது என்று திமுக அரசின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். 

முற்றிலும் அரசியல் பழி வாங்கும் நோக்கம்:

அண்ணாமலையை தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எஸ்ஆர்எம் குழும தலைவர், அமைச்சர் கே.என்.நேருவின் மகனுக்கு எதிராக போட்டியிட்டது தான் திமுக அரசின் இந்த முடிவுக்கு காரணம். இது முற்றிலும் அரசியல் பழி வாங்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News