நீதிமன்ற உத்தரவை மீறி மயானக் கட்டுமான பகுதிக்குள் சமூக விரோத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அத்துமீறில்..தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய கிராம மக்கள்!
கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையில், அவர்களின் பயன்பாட்டிற்காக முறையான அனுமதிகளோடு ஈஷா சார்பில் நவீன எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பகுதிக்குள் நேற்று (14/06/2024) கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழையவும், அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். அவர்களை ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்களும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள இக்கரை போளுவாம்பட்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துவயல், தாணிக்கண்டி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பல ஆண்டுகளாக தங்களின் பயன்பாட்டிற்காக மின் மயானம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர். இந்நிலையில் இக்கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அரசின் உரிய அனுமதிகளான கிராம பஞ்சாயத்தின் கட்டிட அனுமதியும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் Consent to Establish CTE ஆகியவைகளை பெற்ற பின்னர் ஈஷாவின் சார்பில் எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் பொருட்டு தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக சிவஞானம், சுப்ரமணியன், காமராஜ் ஆகியோர் மயானக் கட்டுமானத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஈஷா சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மயான கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
ஆனாலும் சுப்ரமணியன் மற்றும் சிவஞானம் அவர்களின் ஆட்களோடு மயான கட்டுமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, அங்குப் பணியில் இருந்தவர்களை மிரட்டியும் சென்றார். மேலும் இவர்களின் குழு எரிவாயு மயானத்திற்கு எதிராக கிராம மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரவச் செய்து ஊர் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனைக் குறிப்பிட்டு, இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி 6 கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது